அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!
நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!
மாறிவரும் 5ஜி யுகத்தின் வேகத்தில் வேலை செய்யும் முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மாறிவருகின்றன. ஓடி, ஓடி உழைத்த காலமெல்லாம் மலையேறிவிட்ட இந்த நவீன காலத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது ஒரே இடத்தில் நின்றுகொண்டோ வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
உட்கார்ந்துகொண்டு வேலை பார்ப்பவர்கள் முதுகு வலி, மன அழுத்தம், செரிமான பிரச்சினைகள், தூக்கமின்மை, மூட்டுவலி போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
இவை ஒருபுறம் இருக்கட்டும்..! ஆனால்..
பெரிய மளிகைக் கடைகள், மால்கள், துணிக்கடைகள், ஷோரூம்கள், நகைக் கடைகள் போன்ற இடங்களில் பல விற்பனையாளர்கள் அல்லது விற்பனைப் பணிப் பெண்கள் ஏன் நாள் முழுவதும் நின்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் ஏன் உட்காருவதில்லை என்றோ அல்லது அவர்களுக்கு இருக்கை வசதிகள் இல்லாதது ஏன்? என்றோ நீங்கள் எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
எங்கேயும் அவர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்ய உரிமையாளர்கள் முன்வருவதில்லை. மேலும், கடையில் வாடிக்கையாளர் இல்லாதிருந்தாலும்கூட பணியாளர்கள் வேலைநேரத்தில் உட்காருவதற்கு அனுமதியும் அளிப்பதில்லை.
ஒருவர் எவ்வளவு நேரம் வேலை பார்க்க வேண்டுமென்பது பற்றி முறையான சட்ட வழிமுறைகள் இல்லாததாலும், தங்கள் வேலையை இழக்க நேரிடலாம் என்ற பயத்தாலும் பெரும்பாலும் இந்த நிலைமைகளிலேயே அவர்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பற்றிக் கவலைப்படும் நேரத்தில் அதிகம் சம்பாதிக்கும் அதிக பாதுகாப்பு உள்ள தொழில் எனக் கருதப்படும் அரசு வேலை பார்க்கும் ஊழியர்களும் இந்த மாதிரியான சூழ்நிலைக்குள் வேலை பார்க்கும் கட்டாயத்தில் உள்ளனர்.
உதாரணமாக வெயில், மழையெனப் பாராமல் நடுரோட்டில் நாள் முழுவதும் நின்றுகொண்டே வேலை பார்க்கும் போக்குவரத்துக் காவல் துறையினர் உள்பட எல்லையில் காவல் காக்கும் ராணுவ வீரர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
மாறிவரும் தற்போதைய காலகட்டத்தில் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ற வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருக்கிறது. நல்ல கல்வி, வேலைக்கான தகுதி உள்ள பலர் எந்த வேலையும் கிடைக்காமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலையைச் செய்து பிழைப்பு நடத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
நின்றுகொண்டு வேலை பார்ப்பவர்களில் அதிகம் படித்தவர், குறைவாக படித்தவர் என்ற ஏற்றத்தாழ்வு எதுவும் கிடையாது. அதிகமாக, குறைவாக வருவாய் ஈட்டுபவர் என்றில்லாமல் அனைவருமே இந்தப் பிரச்சினையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செய்யறிவு மனிதனின் வேலைகளைப் பறித்துவிடுமா? என்ற விவாதம் சூடுபிடித்துக்கொண்டிக்கும் வேளையில், “நாங்கள் இயந்திரங்களைப் போலவே நடத்தப்படுகிறோம். மனிதர்களைப் போல அல்ல" என்கின்றனர் பலரும்.
இதுபோல நெடுநேரம் நின்றுகொண்டு பணிபுரியும் நிர்பந்தம் நாட்டில் பலருக்கும் உள்ளது. உதாரணமாக, ராணுவ வீரர்கள் கடுங்குளிரிலும் கொளுத்தும் வெயிலிலும்கூட நின்று கொண்டே பணிபுரிகின்றனர்.
தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில், பெரிய நகைக் கடைகள், துணிக் கடைகளில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களே அதிகளவில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். முக்கியமாக பெண் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதன் நோக்கமாகவும், குறைந்த சம்பளத்தில் அவர்கள் எந்த வேலைக்கும் தயாராக இருப்பதும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்கள் தினசரி 10-12 மணி நேரம் தங்களுக்கான ஷிப்டுகளில் நின்றுகொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி பொங்கல், தீபாவளி போன்ற விழாக் காலங்களில் அவர்கள் 16 மணி நேரத்துக்கு அதிகமாக ஒரே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் இருக்கிறது.
பொதுவாகப் பல்பொருள் அங்காடியில் ஊழியர் காலை 9.30 மணிக்கு வேலைக்குச் சென்று இரவு 9.30 மணியளவில் வீட்டுக்குப் புறப்படுவார். சட்டப்படி, அரைமணி நேர இடைவேளையுடன் 8 மணி நேரம் காட்டப்படுகிறது. இருப்பினும், உண்மை என்னவென்றால், அத்தகைய தொழிலாளர்கள் பணியிடத்தில் கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்க்கிறார்கள். கூடுதலாக, பண்டிகை நாள்களிலும் பிற பரபரப்பான மாதங்களிலும் அவர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுகிறது.
ஜவுளிக் கடைத் தொழிலில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய பிரச்சினைகள், 2010 ஆம் ஆண்டு வெளியான, இயக்குநர் வசந்தபாலனின் ‘அங்காடித் தெரு’திரைப்படத்தின் மையக் கருவாகவும் அமைந்திருக்கும்.
ஜவுளிக் கடைத் தொழிலாளர்களைத் தவிர்த்து செவிலியர்கள், வீட்டுக் காவலர்கள், கட்டடப் பணியாளர்கள், கட்டடப் பொறியாளர், பல்பொருள் அங்காடி விற்பனையாளர்கள், முடி திருத்துபவர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், டீ மாஸ்டர், கணித ஆசிரியர், சமையல்காரர்கள், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர்கள், சிஎன்சி இயந்திர ஆபரேட்டர்கள், சேமிப்புக் கிடங்குகளில் வேலை செய்பவர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் என நீளும் நின்றுகொண்டே வேலை பார்க்கும் ஊழியர்களில் எண்ணிக்கையைப் போல அவர்களுக்கு ஏற்படும் நோய்களும்கூட நீண்டுகொண்டே செல்கின்றன.
2020 ஆம் ஆண்டு ஓர் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் 97 சதவிகிதத்துக்கு அதிகமான சமையல் தொடர்பான வேலைகளில் உள்ளோர் நாள் முழுவதும் நின்றுகொண்டே வேலை செய்வதாகத் தரவுகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து நிற்பதால் ஏற்படும் வலிகளும் சிக்கல்களும்!
தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஒருவர் தொடர்ந்து ஓரிடத்தில் நின்றுகொண்டு வேலை செய்வதால் கீழ் முதுகு வலி, உடல் சோர்வு, தசைவலி, கால் மரத்துப்போதல், கால் வீக்கம் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்களுக்கும் காரணமாக அமைவதாகவும் அந்தத் தரவுகள் கூறுகின்றன.
ஒரே இடத்தில் இருந்து வேலை செய்வதற்குப் பதிலாக அருகருகே நடமாடுவடுவது, சிறிது உட்கார்ந்து களைப்பாறுவது அல்லது சாய்ந்த நிலையில் இருப்பது போன்றவை உடல்நலக் குறைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க:நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்த..!
பணியாளர்களின் கருத்துகள் என்ன?
இதுபற்றி அறுவைச் சிகிச்சைப் பிரிவில் வேலை பார்க்கும் நிபுணர் ஒருவர் கூறும்போது, “சில நேரங்களில் 10 மணி நேரத்துக்கும் அதிகமாக அறுவைச் சிகிச்சைகளில் ஈடுபடுவதுண்டு. இதுபோன்று நீண்ட நேரங்கள் நின்றுகொண்டே இருப்பதால் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்புச் சுருட்டல் நோய் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. வெரிகோஸ் வெயின் நோய் ஏற்பட்டால், கால்களில் உள்ள நரம்புகள் வீங்கி, அதிக வலியை ஏற்படுத்தும். நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதால், ரத்த ஓட்டமும் தடைப்படும்” எனத் தெரிவித்தனர்.
வெரிகோஸ் வெய்னின் அறிகுறிகள்
தொடர்ந்து ஓரிடத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு அன்றைய நாள் முடிவில் இரவில் தூங்குவதற்கு முன்னதாக, அதீத கால்வலி, கால் மரத்துப் போதல், ரத்தம் உறைந்தது போன்று கால் நீல நிறத்துக்கு மாறுதல் போன்றவை வெரிகோஸ் வெய்ன் நோயின் அறிகுறிகளாகும்.
தீர்வுதான் என்ன?
ஓரிடத்தில் நின்றுகொண்டு வேலை பார்ப்பவர்கள் சிறிய நாற்காலியில் அமர்ந்து, சிறிது நேரம் தங்களது கால்களுக்கு ஓய்வளிக்கலாம், சிட்-ஸ்டாண்ட் ஸ்டூல் எனப்படும் நின்றுகொண்டே உட்காரும் உயரமான நாற்காலி, பிரத்யேக காலணிகள் அல்லது கால் மிதியடிகளைப் பயன்படுத்தலாம்.
நின்றுகொண்டு வேலை செய்பவருக்கு ஒரு நாற்காலி கொடுத்துவிடலாம் என அனைவரும் கூறுவது நியாயம்தான். ஆனால், அதிலும் சில பணியாளர்கள் சிக்கலில் உள்ளனர்.
இதுபற்றி புத்தக விற்பனை நிலையத்தில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தெரிவிக்கையில், “ஓரிடத்தில் நின்றுகொண்டு வேலை பார்ப்பவருக்கு நாற்காலி என்பது சாத்தியமானது. ஆனால், எங்களைப் போன்ற புத்தக விற்பனையாளரின் பெரும்பாலான வேலைகள், புத்தகங்களை பிரித்து எடுத்தல், வரிசைப்படுத்துதல், அலமாரிகளில் ஒழுங்குபடுத்தி வைப்பது போன்றவைதான். இதனால், நாங்கள் உட்கார்ந்துகொண்டு வேலை பார்ப்பது என்பது சாத்தியமில்லாதது" என்கிறார்.
தொழிலாளர்களுக்கான சட்டம் என்ன சொல்கிறது?
2018 ஆம் ஆண்டில், அண்டை மாநிலமான கேரளத்தில் பெண் தொழிலாளர்கள் நின்று கொண்டே வேலை செய்வதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இருக்கை வசதிகள் கட்டாயமாக்கும் சட்டத்தை அந்த மாநில அரசு இயற்றியது. அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இருக்கை வசதிகளை வழங்குவதை கட்டாயமாக்கும் புதிய மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. அதன்படி, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பிரிவு 22-ஏவின்படி, ஒவ்வொரு நிறுவனத்திலும் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... இல்லாத தரவுகளும் செல்லாத சாதனைகளும்