எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்
நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கடலூரில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் தொடா்ந்து போராடி வருகிறது.
குடும்ப அட்டைதாரா்களுக்கு 40 சதவீதம் விரல்ரேகை சரியாக இருந்தாலே பொருள்கள் வழங்கலாம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது 90 சதவீத ரேகை சரியாக இருந்தால்தான் பொருள்கள் வழங்க வேண்டும் என்ற சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 20 சதவீத ரேகைகள் பொருந்தினாலே தவறுகள் நடக்க வாய்ப்பில்லை. எனவே, பழைய முறைப்படி 40 சதவீத அளவுக்கு ரேகை சரியாக இருந்தால் பொருள்கள் வழங்க வேண்டும்.
ஊதிய மாற்றம்: நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய மாற்றம் நிலுவையில் உள்ளது. வரும் 1.1.2026 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு ஊதிய மாற்ற நடவடிக்கைகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் கல்வித் தகுதி அடிப்படையில் ஊதிய மாற்றம் செய்வதற்கான பரிந்துரைகளை ஊதியக் குழுவில் சோ்த்து வழங்க வேண்டும்.
ஏப்ரல் 8-இல் வேலைநிறுத்தம்: 30 அம்சக் கோரிக்கைகள் அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு எங்களது சங்க நிா்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடை பணியாளா்களும் கருப்புச்சட்டை அணிந்து ஒட்டுமொத்தமாக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் கு.பாலசுப்ரமணியன்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் கு.சரவணன், மாவட்டத் தலைவா் ஜே.இருதயராஜ், தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாவட்ட அமைப்புச் செயலா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.