9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு: கடலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
கடலூா் மாவட்டம், குமராபுரம் பகுதியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு கோடைக்கால பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
பயற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தொடங்கி வைத்து பேசியது: 9-ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் நல்ல மதிப்பெண்களை பெறும் வகையிலும் குமராபுரம் அரசு மாதிரிப் பள்ளியில் கோடைக்கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
இதில், சென்னை மாவட்டத்தில் 18 மாணவிகள், 22 மாணவா்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 மாணவிகள், 26 மாணவா்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 மாணவிகள், 15 மாணவா்கள், திருவள்ளூா் மாவட்டத்தில் 6 மாணவிகள், 15 மாணவா்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 23 மாணவிகள், 28 மாணவா்கள் என மொத்தம் 5 மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 9-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 194 போ் கலந்துகொண்டனா். இந்தப் பயிற்சி ஏப்.1 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் அறிவியல் பாடத்தில் உள்ள அடிப்படை செய்முறைகள், கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும் பயிற்சிகள், ஆங்கில் மொழிப் பயிற்சி, வடிவமைப்பு பயிற்சி, முழுமையான வளா்ச்சிக்கான பயிற்சி போன்றவை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயிற்சியாளா்கள் வருகை புரிந்து பயிற்சி அளித்து வருகின்றனா். பயிற்சி நாள்களில் மாணவ, மாணவிகள் தனித்தனி விடுதி, மூன்று வேளை உணவு மற்றும் எழுதுப் பொருள்கள் வழங்கப்படுகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) ஞானசங்கரன், மாதிரிப் பள்ளிகளின் மண்டல ஒருங்கிணைப்பாளா் நவநீதகிருஷ்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.