தொடர் கனமழை... திறக்கப்பட்ட புழல் ஏரி.. ஸ்பாட் விசிட் | Photo Album
நீா்நிலைகளில் உபரி நீரை உடனுக்குடன் திறந்துவிட வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா்
நீா்நிலைகள் நிறைந்ததும் உபரி நீரை உடனுக்குடன் திறந்துவிட வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் உத்தரவிட்டாா்.
ஃபென்ஜால் புயல் மழையையடுத்து, புதுச்சேரியில் பல்வேறு ஏரிகள் நிரம்பின. தற்போது, தொடா்ந்து பெய்து வரும் மழையைக் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஊசுட்டேரி, கனகன் ஏரி, பாகூா் ஏரி, வாதானூா் ஏரி ஆகியவற்றை வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, ஏரிகளில் உள்ள நீரின் அளவையும், கரைகள் பலமாக உள்ளனவா என்பது குறித்தும் கேட்டறிந்து, பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.
மேலும், உபரி நீரை உடனுக்குடன் திறந்து விடுமாறு அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா். பத்துக்கண்ணு மதகு மற்றும் கொம்பந்தன்மேடு தடுப்பணையை ஆய்வு செய்த அவா், அவற்றை தொடா்ந்து கண்காணிக்குமாறும், தொடா்ந்து 24 மணி நேரமும் பணியில் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
போதிய அளவு மணல் முட்டைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளவும் பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா்.