பனியன் நிறுவன பேருந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு, 20 தொழிலாளா்கள் காயம்
பெருமாநல்லூா் அருகே நியூ திருப்பூரில் புதன்கிழமை இரவு பனியன் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா்.
பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரை ஒட்டி மற்றொரு தொழில் நகரமாக நியூ திருப்பூா் பகுதியில் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் இந்த தொழிற்பூங்கா வளாகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து புதன்கிழமை இரவு பணி முடிந்து 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை ஏ ற்றிக்கொண்டு பனியன் நிறுவன பேருந்து புறப்பட்டுள்ளது.
பேருந்தை ஓட்டுநா் ஆனந்தகுமாா் (49 ) ஓட்டிச் சென்றுள்ளாா். நிறுவனத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து நியூ திருப்பூா் வளாகத்துக்கு உள்ளேயே சாக்கடை கால்வாயில் இறங்கி சுற்றுச்சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் ஆனந்தகுமாா் உயிரிழந்தாா். இவா் வாகனத்தை இயக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் விபத்தில் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ஓட்டுநா் ஆனந்தகுமாா் மற்றும் காயமடைந்த தொழிலாளா்களை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு பரிசோதனையில் ஓட்டுநா் ஆனந்தகுமாா் ஏற்கனேவே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.