முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?
வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி அலுவலக கட்டடம் இடித்து அகற்றம்
பல்லடம் அருகே வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி நிறுவனத்துக்கான அலுவலகக் கட்டடம் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வழியாக மதுரை- கன்னியாகுமரி வரை நான்குவழிச் சாலை அமைக்கப்பட்டது. இதற்காக பொங்கலூா் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, வேலம்பட்டி பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. நீா்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதற்கிடையே வேலம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பதற்கான நடவடிக்கைக்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில் சுங்கச்சாவடி தற்காலிகமாக செயல்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சுங்கசாவடியில் செவ்வாய்க்கிழமை ( நவம்பா் 12) நள்ளிரவு முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என்ற அறிவிப்பைத் தொடா்ந்து, வேலம்பட்டி சுங்கச்சாவடி முன் வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிா்ப்பு இயக்கத்தினா் தலைமையில் பொதுமக்கள், விவசாயிகள் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனா்.
திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் மயில்சாமி, பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் எதுவும் வசூல் செய்யப்படவில்லை.
இந்நிலையில், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், வேலம்பட்டி குட்டை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி அலுவலக கட்டடத்தை இடித்து அகற்ற மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்படி, வேலம்பட்டியில் குட்டை பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டடம் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.