'பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை' - பிரதமர் மோடி பேச்சு!
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையைப் பெறுவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிகார் மாநிலம் மதுபானி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
"இன்று பிகார் மண்ணில் இருந்து உலகத்திற்கே ஒன்று கூறுகிறேன். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்டுபிடித்துத் தண்டிக்கும். பூமியின் எல்லைகள் வரை அவர்களை துரத்திப் பிடிப்போம்.
பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைபடாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் இருக்காது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்தத் தீர்மானத்தில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.
இந்த பயங்கரவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமும் வருத்தத்தில் உள்ளது. இந்த தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளும், இந்த சதியில் ஈடுபட்டவர்களும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிய தண்டனையைப் பெறுவார்கள் என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் மன உறுதி பயங்கரவாதத்தை இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிவிடும்" என்று பேசியுள்ளார்.