பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் சீனாவுக்கு வழங்கிய லடாக் பரிசை மோடி ரத்து செய்ய வேண்டும்: சுவாமி
பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள சீனாவுக்கு வழங்கப்பட்ட லடாக் பரிசை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலிருந்து பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டு, அவர்களது விசாக்களையும் ரத்து செய்தது.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளனர்.
இதனிடையே, பாகிஸ்தான் அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைக் காப்பதற்கு முழு ஆதரவளிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”26 பேரைக் கொடூரமாக கொலை செய்த பாகிஸ்தானுக்கு துணை நிற்பதாக சீனா வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதனால், மக்களவையில் எவ்வித ஒப்புதலும் பெறாமல், திருத்தப்பட்ட எல்லை ஒப்பந்தம் என்ற பெயரில் கடந்தாண்டு சீனாவுக்கு அளித்த லடாக் பிரதேசத்தின் பரிசை மோடி ரத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - சீனா ஒப்பந்தம்
கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம், கல்வான் பள்ளத்தாக்கில் எல்லை தாண்டிய சீன வீரா்களுக்கும் இந்திய படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு இருநாடுகளுக்கும் இடையே கிழக்கு லடாக் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன.
இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு, கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்வது மற்றும் அங்கிருந்து இருநாட்டு வீரா்களை திரும்பப் பெறுவது குறித்து இந்தியா-சீனா இடையே கடந்தாண்டு இறுதியில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.