செய்திகள் :

'பாஜக பக்கம் சாயும் அதிமுக?' - அமித் ஷா, எடப்பாடி சந்திப்பின் பரபர பின்னணி

post image

உள்துறை அமைச்சர் அமித் ஷா, அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் திடீர் டெல்லி விசிட் என ஏற்கெனவே அனல் தகிக்கிறது, தமிழக அரசியல் களம். போதாக்குறைக்கு இந்த நிகழ்வுகளையெல்லாம் வைத்து பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க இடம்பெறப்போகிறது என்கிற பேச்சும் வலுத்திருக்கிறது.

என்னதான் நடக்கிறது, அ.தி.மு.க, பா.ஜ.க-வில்?. விசாரித்தோம்...

அமித்ஷா பதிவு

அடுத்தடுத்த அரசியல் சந்திப்புகள்

கடந்த 25-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். பிறகு அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், "2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகளை நிலவி வருகின்றன. அதையெல்லாம் உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளோம். மேலும் 100 நாள் வேலைத் திட்டம், கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதியைத் தாமதப்படுத்தாமல் விடுவிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம்.

`அரசியல் குறித்துப் பேசவில்லை’

தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையைத் தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்குப் பாதிப்பு வரக்கூடாது. காவிரி, கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். டாஸ்மாக் முறைகேடு, போதைப் பொருள் நடமாட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறோம்.

முழுக்க, முழுக்க மக்கள் பிரச்னைகள் குறித்துத்தான் பேசினோம். தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறது. எனவே அரசியல் குறித்துப் பேசவில்லை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அமைப்போம். ஆகவே அதைப் பற்றிக் கேட்காதீர்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கொள்கை நிலையானது, கூட்டணி சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறும்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதன் பின்னணி குறித்துப் பேசும் விவரப்புள்ளிகள், "எடப்பாடி பழனிசாமி, 'இந்த சந்திப்பில் அரசியல் பேசவில்லை' என, சொல்கிறார். ஆனால், '2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தே.ஜ கூட்டணி அரசு அமையும்' என, அமித்ஷா சொல்லியிருக்கிறார். இதன் மூலமாகவே இந்த சந்திப்பில் அரசியல் குறித்துப் பேசப்பட்டதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

இதில் இரண்டு விஷயங்கள் முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்கிறார்கள் டெல்லி தரப்பினர். அதாவது சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ் போன்றவர்களை எடப்பாடியுடன் இணைத்து ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வை உருவாக்க பா.ஜ.க விரும்புகிறது. ஆனால், இதில் தனக்கு விருப்பம் இல்லை என எடப்பாடி தரப்பு தெரிவித்து வருகிறது. அதே கருத்தைத்தான் இந்த சந்திப்பிலும் மீண்டும் எடப்பாடி சொல்லியிருக்கிறார்.

இதேபோல் அ.தி.மு.க தலைவர்கள் குறித்து கடுமையாக அண்ணாமலை விமர்சனம் செய்து வருவதும் குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து முன்னதாக எடப்பாடி தரப்பு டெல்லிக்குப் புகார் தெரிவித்திருக்கிறது. அண்ணாமலையைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே பா.ஜ.க-வுடன் கூட்டணி குறித்து பரிசீலிக்கப்படும் என அ.தி.மு.க தலைவர்கள் சிலர் பேசி வருகிறார்கள். இதனால் அண்ணாமலையும் சற்று அடக்கி வாசித்து வந்தார்.

ஆனால் சமீபத்தில், "பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்றனர். இப்போது பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கத் தவம் கிடக்கிறார்கள்" எனப் பேசியது சர்ச்சையானது. பிறகு அந்த கருத்தை தான் அதிமுகவை குறிப்பிட்டு சொல்லவில்லை மறுத்துவிட்டார். இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

தேர்தலுக்குக் குறுகிய காலமே இருப்பதால் விரைவில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். இதனால் தமிழக அரசியல் களம் மேலும் விறுவிறுப்பாகும்" என்றனர். இந்த பரபரப்புக்கு மத்தியில்தான் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றிருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

`கூட்டணிக்கான முதல் படி’

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், "அமித் ஷா, எடப்பாடி சந்திப்பு கூட்டணிக்கான முதல் படி என்றுதான் சொல்ல வேண்டும். அருமையான சந்திப்பை டெல்லியில் எடப்பாடி நடத்திவிட்டு வந்திருக்கிறார். டின்னர் மீட் என்பது மிகவும் வலிமையானது. அது கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்திருக்கிறது.

முதலில் பேசிய எடப்பாடி, `மத்திய அரசு செய்து வரும் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை, கல்விக்கு நிதி ஒதுக்காதது போன்றவை தி.மு.க-வின் அரசியலுக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது. எனவே உங்களது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள் என்றும், அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி அமைக்க வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறீர்கள். ஆனால் அண்ணாமலையை வைத்துக்கொண்டு கூட்டணி எப்படிச் சாத்தியமாகும்?. அவரை தலைவராக வைத்துக்கொண்டு எங்களது தொண்டர்கள் பா.ஜ.க-வுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இல்லை" எனத் தெரிவித்திருப்பதாக தகவல்.

தொடர்ந்து, `சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ் போன்றவர்களை அ.தி.மு.க-வில் இணைக்க தான் தயாராக இல்லை. ஆனால் கூட்டணி அமைந்தால், மொத்தமாகக் குறிப்பிட்ட சீட்டை பா.ஜ.க-வுக்கு என ஒதுக்கி விடுகிறேன். அதிலிருந்து நீங்கள் அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிடுங்கள். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி குறித்து உடனே அறிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

இதையெல்லாம் கவனமாகக் கேட்ட அமித்ஷா, `கூட்டணி குறித்து மட்டும் உடனே அறிவித்துவிடலாம்’ எனச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பதிலளித்த எடப்பாடி & கோ, "ஜூன் மாதத்திற்குப் பிறகு அறிவிக்கலாம். அதுதான் சரியாக இருக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார். இப்படியாக அந்த சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.

இதன் மூலம் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி கனிந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும். இதை அமித்ஷாவின் எக்ஸ் பதிவும் உறுதி செய்கிறது.

குபேந்திரன்

இந்த சூழலில்தான் அண்ணாமலை டெல்லி சென்றிருக்கிறார். அவர் நட்டா, அமித் ஷாவைச் சந்தித்துப் பேசுகிறார். அண்ணாமலை தலைவராக நீடிப்பதுதான் இப்போது பெரிய விவாதமாக இருக்கிறது. ஜூன் மாதம் வரையில் அவரை வைத்திருந்துவிட்டு, பிறகு மாற்றம் செய்கிறார்களா? அல்லது உடனே மாற்றம் செய்யப் போகிறார்களா எனத் தெரியவில்லை.

பா.ஜ.க-வில் ஒரு பதவியில் இருப்பவரின் அதிகாரம் குறைக்கப்படுவது அவ்வளவு எளிதில் நடக்காது. இதற்கு முன்பு தலைவராக இருந்த முருகன் மீது கூட சில குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டன. இதையடுத்துதான் அவரை மத்திய அமைச்சராக்கினார்கள். அண்ணாமலை விவகாரத்தில் உடனே அவரை மாற்றினால் எடப்பாடிக்கு மைலேஜ் கிடைக்கும். கூடவே கூட்டணிக்கும் பலம் கிடைக்கும். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு நாம் தமிழர் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவர்கள் கூடுதல் இடங்களைக் கேட்டு நெருக்கடி கொடுத்தார்கள் என்றால், விஜய் வந்துவிடுவார். இதனால் வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பாக இருக்கும்" என்றார்.

மறுபக்கம், அமித் ஷா நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்னனை சந்தித்து பேசி இருக்கிறார். தமிழக பாஜகவில் சில அதிரடி விஷயங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவராக அண்ணாமலையை வைத்துகொண்டு, கூட்டணி தேர்தல் விவகாரங்களில் மற்ற கட்சிகளிடம் பேச ஒரு ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுதலாம், அதில் அதிமுகவுடன் சுமூகமாக செல்லும் தமிழக நிர்வாகிகள் இடம் பெறுவார்கள் என்ற திட்டமும் பாஜக தரப்பில் இருக்கிறது.

மறுபக்கம், திமுக கூட்டணியோ, பாஜக அதிமுக கூட்டணி அமைந்தால், 2026 தங்களுக்கு எளிதாகிவிடும் என்றும் சொல்கிறார்கள். தேர்தல் காலம் நெருங்க நெருங்க இன்னும் பல அரசியல் மூவ்கள் அரங்கேறும்.!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`அதிமுக-வை அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார்‌ எடப்பாடி பழனிசாமி!' - ஆ.ராசா சொல்வதென்ன?

தி.மு.க மாணவர் அணியின் மாநில அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் இன்று நடைபெற்றது. மாணவர் அணியின் மா... மேலும் பார்க்க