பாம்பன் புதிய பாலத்தில் இறுதிக்கட்ட ரயில் சோதனை ஓட்டம்
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சௌத்ரி முன்னிலையில், 80 கி.மீ. வேகத்தில் இறுதிக்கட்ட ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராமேசுவரத்துக்கான ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் புதன், வியாழன் ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், 2-ஆவது நாளான வியாழக்கிழமை தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சௌத்ரி பாம்பன் புதிய பாலத்தில் ட்ராலியில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது, நவீன தொழில்நுட்பத்தில் பாலத்தின் நடுவில் செங்குத்தாக தூக்கும் வகையில் இரும்பாலான இணைப்புப் பகுதியை (கா்டா்) தூக்கி இறக்கி ஆய்வு செய்தாா்.
பின்னா், மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரை 80 கி.மீ. வேகத்தில் இறுதிக்கட்ட ரயில் சோதனை ஓட்டம் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம். சௌத்ரி முன்னிலையில் நடைபெற்றது.
இதையடுத்து, ராமேசுவரம் சென்று ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:
இந்த இறுதிக்கட்ட ஆய்வு அறிக்கை ரயில்வே ஆணையத்திடம் அளிக்கப்படும். இதன் பிறகு, பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இந்த ஆய்வின் போது, ரயில்வே பொறியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.