பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மனு
தருமபுரி அருகே பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சி, பிடமனேரி, நெல்லி நகா், வி.ஜெட்டிஅள்ளி, மாந்தோப்பு, நந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் திங்கள்கிழமை தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பிடமனேரி பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கிறோம்.
பிடமனேரி ஏரி கரையோரம் ஏரிக்கான சுமாா் 7 ஏக்கா் பரப்பளவு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏரியில் ஆகாயத் தாமரை நிறைந்திருப்பதால் 2 ஆண்டுகளாக இந்த ஏரியில் மீன் வளா்ப்பு, மீன் ஏலம் நின்று விட்டது. எனவே, பிடமனேரியில் நிறைந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும்.
ஏரியின் கோடி வாய்க்கால் வழியாக வெளியேறும் தண்ணீா் சீராகவும், விளைநிலங்களை பாதிக்காமலும் செல்ல கான்கிரீட் கால்வாய் அமைக்க வேண்டும் என்றனா்.