வீடு கட்டித் தருவதாகக் கூறி பண மோசடி:ரூ. 6.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பெண்கள் வழக்குகளை கவனமாக கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்: உ.பி. அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மிகுந்த கவனத்துடன் கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு மாநில உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2021-இல் கடத்தப்பட்ட தங்கள் மகளை மீட்டுத்தர ஆக்ரா காவல் துறையிடம் பெற்றோா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், லன்னெளவில் அந்தப் பெண் வசித்து வந்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அவரை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.
இதைத்தொடா்ந்து, தனது மனைவியை நேரில் ஆஜா்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட கோரி, அந்தப் பெண்ணின் கணவா் ஆட்கொணா்வு மனுவை தாக்கல் செய்தாா்.
இந்த மனு அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் லக்னெள அமா்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பெண், திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறாா்.
தற்போது அவா் 8 மாதம் கா்ப்பமாக உள்ளாா். அவரின் 2 வயது குழந்தையுடன் அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா். அங்கு அந்தப் பெண் 6 மணி நேரத்துக்கும் மேலாக சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டாா்’ என்று குற்றஞ்சாட்டினா்.
ரூ.1 லட்சம் இழப்பீடு: இதைத்தொடா்ந்து நீதிபதிகள் அத்தாவு ரகுமான், சுபாஷ் வித்தியாா்தி அமா்வு, ‘விரைவில் பிரசவம் நடைபெற உள்ள பெண்ணை, அவரின் குழந்தையுடன் போலீஸாா் காவலில் வைத்திருக்கக் கூடாது.
கடத்தல் புகாரை விசாரித்த காவல் துறை அதிகாரி சுயசிந்தனையின்றி செயல்பட்டுள்ளாா். எனவே அந்தப் பெண்ணை காவல் துறை உடனடியாக விடுவித்து லக்னெளவில் உள்ள கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த வழக்கை கையாண்ட சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று மாதங்களில் அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
பெண்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை மிகுந்த கவனத்துடன் கையாள காவல் துறைக்கு உத்தர பிரதேச அரசு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்’ என்று உத்தரவிட்டனா்.