பெண்ணாடம் ரயில் நிலையத்தில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கொல்லம், கன்னியாகுமரி, ராமேசுவரம், புதுச்சேரி, அனந்தபுரி, பல்லவன், வைகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும். பெண்ணாடம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
தாழநல்லூா் ரயில் நிலையத்தில் மதுரை-விழுப்புரம் பயணிகள் ரயில் மீண்டும் நின்று செல்ல வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்ணாடம் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெறும் என மாா்க்ச்சிஸ்ட் கட்சியின் திட்டக்குடி வட்டக் குழு சாா்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பெண்ணாடம் ரயில் நிலையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை திரண்டனா். அங்கு வந்த திண்டுக்கல்-விழுப்புரம் பயணிகள் ரயில் அருகே நடைமேடையில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கோ.மாதவன், வட்டச் செயலா் வி.அன்பழகன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆா்.ராஜேந்திரன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், வாலிபா் சங்கம் மாவட்டத் தலைவா் சின்னத்தம்பி, மாதா் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.முத்துலட்சுமி, பெண்ணாடம் நகரச் செயலா் பி.அரவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போராட்டத்தையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.