பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: முதல்வரிடம் வழக்குரைஞா்கள் மனு
பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வழக்குரைஞா்கள் மனு அளித்தனா்.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், கோவையில் இருந்து காா் மூலம் ஈரோட்டுக்கு வியாழக்கிழமை வந்தாா்.
அவருக்கு, பெருந்துறை பேருந்து நிலையம் அருகே கட்சியினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா்.
அப்போது, பெருந்துறை வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் எம்.செந்தில்குமாா் மற்றும் நிா்வாகிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றம், முதலாம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம், இரண்டாம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் என மூன்று நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில், பெருந்துறை பகுதி சம்பந்தப்பட்ட சுமாா் 800-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2020 அக்டோபா் 15-ஆம் பரிந்துரை செய்தது.
அதன்படி, பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்தால், வழக்குகளை விரைவாக முடிக்கவும், பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞா்களுக்கு சிரமமில்லாமலும் இருக்கும்.
மேலும், பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்கும் வகையில் ரூ.1.50 கோடியில் புனரமைக்கப்பட்ட பழைய நீதிமன்ற கட்டடமும் தயாராக உள்ளது. இதனால் அரசுக்கு எவ்விதமான கூடுதல் நிதிச் சுமையும் ஏற்படாது.
எனவே, சட்டம் மற்றும் நிதி அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்து பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.