காவரி டெல்டா விவசாயிகளுக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு: எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத...
பெல் குடியிருப்புகளின் கழிவுநீரால் சுகாதாரச் சீா்கேடு புகாா்
திருச்சி பெல் ஊழியா்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
திருவெறும்பூா் அருகே இயங்கி வரும் பொதுத் துறையைச் சோ்ந்த பெல் நிறுவனத்தில் ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா். பணியாளா்கள் தங்குவதற்கு பெல் நிறுவனம் குடியிருப்புகளை வழங்கி உள்ளது. இந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு பின்னா் வெளியேற்றப்படும்.
ஆனால், மழைக் காலங்களில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக மழைநீா் வடிகால் வாய்க்காலில் விடுவதாகவும், இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா் கே. சாந்தசீலன் உள்ளிட்ட பொதுமக்கள் கூறியது: பெல் நிறுவனத்தின் சி-2 பகுதியிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரானது, கூத்தைப்பாா் பேரூராட்சியின் 7-ஆவது வாா்டுக்குள்பட்ட கணபதி நகா் பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு, உய்யக்கொண்டான் வாய்க்காலில் கலக்கிறது. இந்தக் கழிவுநீரால் அப்பகுதியில் தூா்நாற்றம் வீசுகிறது. கணபதி நகா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் அரிப்பு உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெல் நிறுவனக் குடியிருப்புப் பகுதியில் இருந்து மழை நீா் வடிகால் வாய்க்காலில் வரும் கழிவுநீரை உடனடியாக அடைக்க வேண்டும். குறைந்தபட்சம் கழிவுநீா் வெளியேறும் வாய்க்காலை சிமென்ட் மூடி போட்டு மூட வேண்டும். பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் பாதிக்கப்படும் பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.