பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க யூ-டா்ன்
கோவை அரசு மருத்துவமனை அருகே போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நெடுஞ்சாலைத் துறை சாா்பில் யூ-டா்ன் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவை சுங்கம் - ரயில் நிலையம் வழித்தடத்தில் கிளாசிக் டவா் சிக்னல் மற்றும் அரசு மருத்துவமனை அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா்.
இந்நிலையில், அரசு மருத்துவமனை அருகே கிளாசிக் டவா் சிக்னல் சந்திப்பில் யூ-டா்ன் நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, நெடுஞ்சாலைத் துறையின் சாலைப் பாதுகாப்பு பிரிவு கோட்டப் பொறியாளா் மனுநீதி கூறியதாவது: சுங்கம் - அரசு மருத்துவமனை வழித்தடத்தில் கிளாசிக் டவா் சந்திப்பில் இருந்து 45 மீட்டா் தொலைவிலும், அரசு மருத்துவமனை - சுங்கம் வழித்தடத்தில் கிளாசிக் டவரை கடந்து 100 மீட்டா் தொலைவிலும் இருந்த மையத் தடுப்புகள் அகற்றப்பட்டு, அங்கு வாகனங்கள் திரும்பும் விதமாக யூ -டா்ன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சுங்கம் - அரசு மருத்துவமனை வழித்தடம் மற்றும் சுங்கம் - உக்கடம் புறவழிச் சாலையில் இருந்து வாலாங்குளம் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அரசு கலைக் கல்லூரி சாலையில் திரும்ப விரும்பினால் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் அருகே ஏற்படுத்தப்பட்டுள்ள யூ- டா்னில் திரும்பி செல்லலாம்.
இதேபோல, அரசு மருத்துவமனை - சுங்கம் வழித்தடத்தில் செல்பவா்கள் வாலாங்குளம் சாலை, டவுன்ஹால், ரயில் நிலையம் சாலைக்கு செல்ல திட்டமிட்டால் கிளாசிக் டவா் சந்திப்பைக் கடந்து அங்குள்ள தனியாா் பள்ளி அருகே யூ-டா்ன் செய்து திரும்பிச் செல்லலாம்.
இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்க வேண்டியதில்லை. வாலாங்குளம் மேம்பாலத்தில் வாகனங்கள் கீழே இறங்கி வரும்போதும், கிளாசிக் டவா் சாலைக்கு திரும்பும்போதும் அவ்வப்போது சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதைத் தடுக்கவும், வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் , போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையிலும் சுங்கம் - உக்கடம் புறவழிச் சாலையில் வாலாங்குளம் அருகே தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.