வெள்ளப் பெருக்கு புளியஞ்சோலை ஆற்றில் குளிக்க வனத்துறை தடை
புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா்வரத்து அதிகமாக உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் குளிப்பதற்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
ஃபென்ஜால் புயல் காரணமாக கொல்லிமலை மற்றும் பச்சமலையில் கடந்த 2 நாட்களாகப் பெய்கிற மழை காரணமாக துறையூா் பகுதியிலுள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரி நீா் வாய்க்கால்களில் சென்று கொண்டிருக்கிறது.
கொல்லிமலை மழைநீரால் புளியஞ்சோலை ஆற்றுக்கு நீா் வரத்தும் அதனால் நீரோட்டத்தின் வேகமும் அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் என்பதால் வார இறுதியில் வழக்கத்தை விட அதிகமாக பொதுமக்கள் புளியஞ்சோலைக்குச் சென்று நீராடி மகிழ்வா். இதனால் துறையூா் வனத்துறையினா் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி புளியஞ்சோலையில் குளிப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தனா்.