பேக்கரி, தின்பண்டம் தயாரிப்பு கடையில் தீ விபத்து
சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் பேக்கரி மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தேவபாண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணி மகன் முருகன். இவா், அதே கிராமத்தில் பேக்கரி மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா்.
இந்த நிலையில், தகரத்தால் அமைக்கப்பட்ட அந்தக் கடையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. மேலும், தீ அருகில் உள்ள சக்திவேல் டயா் கடைக்கும் பரவி எரியத் தொடங்கியது. இதுகுறித்து உடனடியாக
சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடினா்.
இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்பு வீரா்கள் வந்து கூட்டு முயற்சியில் தீயை அணைத்தனா்.
தீ விபத்தில் இயந்திரங்கள், மூலப்பொருள்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.