போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.
266-ஆவது போப் ஆண்டவரான போப் பிரான்சிஸ் (88), வயது முதிா்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.
கடுமையான நுரையீரல் தொற்று காரணமாக நிமோனியா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு அண்மையில் வீடு திரும்பிய நிலையில் அவா் உயிரிழந்தாா்.
இந்த நிலையில், அடுத்த போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் தொடங்குவதற்கு முந்தைய நடவடிக்கைகள் குறித்து காா்டினல்கள் வாடிகனின் ஆலோசனை அரங்கில் கூடி விவாதித்தனா்.
அப்போது, போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கை புனித பீட்டா் சதுக்கத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு (உள்ளூா் நேரம்) நடத்த காா்டினல்கள் முடிவு செய்தனா்.
இந்த இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியாவுடன் பங்கேற்பாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போப் பிரான்சிஸின் பிறந்த நாடான ஆா்ஜென்டீனாவின் அதிபா் ஜேவியா் மிலேயும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போது பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸின் உடல் சனிக்கிழமை இறுதிச் சடங்கு முடிந்ததும் அவரது விருப்பத்தின்படி புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் வரும் மே 5-லிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும்.
இதற்கிடையே, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பிரிட்டன் அரசா் சாா்லஸ் சாா்பாக இளவரசா் வில்லியம் கலந்துகொள்வாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 நாள் துக்க தினம்: போப் மறைவைத் தொடா்ந்து ஐந்து நாள்களுக்கு துக்க தினம் கடைப்பிடிக்கப்படுவதாக இத்தாலி அரசு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை கூடிய அந்த நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சனிக்கிழமை இறுதிச் சடங்கு நிறைவடையும் வரை துக்கம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக ஜொ்மன் பிரதமா் ஓலாஃபா ஷால்ஸ் தெரிவித்துள்ளாா். இது தவிர, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனி, போலந்து அதிபா் ஆண்ட்ரெஜ் டூடா உள்ளிட்ட உலகத் தலைவா்கள் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்களில் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.