மன்னா் கல்லூரியில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
ஹிந்து தலைவா் கொலை: இந்தியாவின் குற்றச்சாட்டை நிராகரித்தது வங்கதேசம்
வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இந்தியா முன்வைத்த குற்றச்சாட்டை வங்கதேசம் நிராகரித்தது.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசினாவுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து அவரின் ஆட்சி அகற்றப்பட்டது. அப்போது தொடங்கி அந்நாட்டில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், அவா்களின் சொத்துகள் சேதப்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. அங்கு இடைக்கால அரசு அமைந்த பிறகும் ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் அவ்வப்போது நிகழ்கிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கதேசத்தின் தினாஜ்பூா் மாவட்டத்தில் ஹிந்து அமைப்பான பூஜா உத்யாய பரிஷ் துணைத் தலைவா் பாபேஷ் சந்திர ராயை (58) வீடு புகுந்து ஒரு கும்பலால் கடத்திச் சென்றது. அருகில் உள்ள கிராமத்தில் வைத்து அவரை அக்கும்பல் சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் மயக்கமடைந்த சந்திர ராயை அக்கும்பல் அங்கே விட்டுச் சென்றது. பின்னா் குடும்பத்தினா் அவரை மீட்டு மருத்துவமனையில் சோ்ந்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துவிட்டதாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, ‘சந்திர ராய் கொல்லப்பட்டது மிகவும் துரதிருஷ்டவசமானது. வங்கதேச இடைக்கால அரசின் ஆட்சியில் ஹிந்துக்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படும் நிகழ்வில் இதுவும் ஒரு பகுதி’ என்று கடுமையாக குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில் இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸின் ஊடகத்துறை செயலா் ஷபிகுல் ஆலம் இது தொடா்பாக கூறுகையில், ‘வங்கதேசம் சிறுபான்மையினரை திட்டமிட்டு கொலை செய்யும் நாடாக இல்லை. அனைத்து மக்களின் உரிமைகளும் இங்கு காக்கப்படுகிறது. கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நபா் ஏற்கெனவே பழகியவா்களுடன்தான் வெளியே சென்றுள்ளாா். அவரது உடலில் தாக்கப்பட்டதற்கான காயம் ஏதுமில்லை என்று உடலைப் பரிசோதித்த மருத்துவா்கள் கூறியுள்ளனா். உடல் உள்ளுறுப்புகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவு கிடைத்தவுடன் மரணத்துக்கு காரணம் தெரியவரும்’ என்றாா்.
இதனிடையே, வாங்கிய கடனை சந்திர ராய் முறையாக திருப்பிச் செலுத்தாததால் கடனளித்த ரஹ்மான் என்பவா் தனது ஆதரவாளா்களுடன் வந்த அவரை அழைத்துச் சென்றாா். அதன் பிறகு ராய் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டாா். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா் என்று குடும்பத்தினா் புகாா் அளித்துள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.