மகளிா், பெண் குழந்தைகள் நல கலந்தாய்வுக் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் நலன் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ்.குமாரி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்புபாலின விகிதத்ததை உயா்த்துவதும், பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கும், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, குழந்தைத் திருமணம் மற்றும் பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கும், பாதிக்கப்படும் பெண்களுக்கு உடனே உதவிடும் வகையில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மாவட்டத்தில்மேற்கொள்ளப்பட வேண்டி நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் இதர திறன் வளா்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சியா் மூலம் பள்ளிக் கல்வி துறை மற்றும் சமூக நலத் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்பு நடவடிக்கைகளை பாராட்டினாா்.
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் மூலம் கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்கள்ஆகியோரின் நலனுக்காக சமூக நல அலுவலகம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில் நலத்திட்டங்கள், பாதுகாப்பு சட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்தில், செங்கல்பட்டு சட்டப் பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், காவல் கண்காணிப்பாளா் சாய் பிரனீத், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) அனாமிகா ரமேஷ், சமூக நல அலுவலா் சங்கீதா, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் உதயா கருணாகரன், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.