டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க அனுமதி வழங்கவில்லை: தமிழக அரசு
மகாராஷ்டிரா: ரூ.1500 பெறும் பெண்கள் கைகொடுப்பார்களா? - மலைபோல் நம்பும் பாஜக கூட்டணி!
மகாராஷ்டிராவில் வரும் நவம்பர் 20-ம் தேதி நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் இரு சிவசேனா, இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மட்டுமல்லாது பா.ஜ.க-விற்கும் வாழ்வா சாவா என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மக்களவை தேர்தல் முடிந்து சில மாதங்களே ஆகி இருக்கும் நிலையில், அத்தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெறவில்லை. மக்களவை தேர்தல் முடிந்த சில மாதங்களில் பா.ஜ.க மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் நான்காவது இடத்தில் இருந்த நிலையில் மக்களவை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக அதிகபட்ச இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்திற்கு வந்திருக்கிறது. இதனால் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க-விற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று முதல்வர் பதவியை பிடிக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது.
அதேசமயம் இத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பா.ஜ.க தலைமையிலான ஏக்நாத் ஷிண்டே அரசு பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்ற அதிரடி திட்டத்தை அறிவித்தது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதோடு மட்டுமல்லாது உடனே இத்திட்டத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு 1.50 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நவம்பர் மாதம் வருவதால் நவம்பர் மாதத்திற்கும் சேர்த்து முன்கூட்டியே பணத்தை பெண்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டது ஏக்நாத் ஷிண்டே அரசு.
பணம் வாங்கிய பெண்கள் எப்படியும் தங்களுக்கு வாக்களித்துவிடுவார்கள் என்று பா.ஜ.க, சிவசேனா(ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்) கட்சிகள் நம்புகின்றன. ஆனால் பெண்களுக்கு மறைமுகமாக லஞ்சம் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பெண்கள் பண விவகாரத்தில் தன்னிறைவு பெறவேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதாக ஆளும் கட்சிகள் கூறுகின்றன. இத்திட்டத்தால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும்.
ஆனால் இது போன்ற திட்டத்தை தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சி அறிவித்தும் அக்கட்சி சட்டமன்ற தேர்தலில் தோல்வியையே சந்தித்தது. பணம் இலவசமாக கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டபோதிலும், மகாராஷ்டிராவின் பிரதான பிரச்னையாக விவசாயம் இருக்கிறது. சோயாபீன்ஸ்க்கு சரியான விலை இல்லாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அதோடு வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதித்த தடையால் வெங்காய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிக்கப்படும் முன்பாக மத்திய அரசு இத்தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. சோயாபீன்ஸ் விலை வீழ்ச்சி, வெங்காய விலை வீழ்ச்சியால் நாசிக், வித்ர்பா மற்றும் மராத்வாடாவில் உள்ள மக்களவை தொகுதியில் பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வியை தழுவின. அதன் பிறகுதான் வெங்காய ஏற்றுமதிக்கு தடை நீக்கம், சோயாபீன்ஸ்களை குறைந்த பட்ச கொள்முதல் விலைக்கு வாங்குவது போன்ற காரியங்களில் மத்திய அரசு ஈடுபட்டது.
இது தவிர மகாராஷ்டிரா முழுவதும் இட ஒதுக்கீடு பிரச்னையும் நெருப்பாக புகைந்து கொண்டிருக்கிறது. மராத்வாடா இட ஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே தொடர்ந்து பா.ஜ.க கூட்டணி அரசுக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்து வருகிறார். பா.ஜ.க-வின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மீது ஜராங்கே கடும் அதிருப்தியில் இருக்கிறார். மராத்தா இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்கு பட்னாவிஸ்தான் காரணம் என்று ஜராங்கே குற்றம் சாட்டிக்கொண்டிருக்கிறார். அதோடு தனது ஆதரவாளர்களை தேர்தலில் நிறுத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் மனோஜ் ஜராங்கேயிடம் பா.ஜ.க தூதர்கள் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இப்பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஜராங்கேயின் சொந்த ஊரில் நள்ளிரவில் நடைபெறுகிறது. ஆனாலும் ஜராங்கே பா.ஜ.க-விற்கு வளைந்து கொடுக்காமல் இருந்து வருகிறார். மக்களவை தேர்தலில் தோல்வி ஏற்பட்டதால் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க-விற்கு பெற்றியை பெற்றுக்கொடுக்க வேண்டிய நெருக்கடியில் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார்.
பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை மலைபோல் பா.ஜ.க கூட்டணி நம்பிக்கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி தொகுதிப் பங்கீட்டைக்கூட முடிக்க முடியாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கிறது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடைந்ததால் அக்கட்சிகளுக்கு இருக்கும் அனுதாப அலை உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருக்கு கைகொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். அது பற்றி தேர்தல் முடிவுகள் வந்தால்தான் தெரியவரும்.