மணிப்பூா் வன்முறை: மன்னிப்பு கோரினாா் முதல்வா் பிரேன் சிங்
மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மாநில முதல்வா் பிரேன் சிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவா் மன்னித்தும், கடந்த கால தவறுகளை மறந்தும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.
மணிப்பூரில் பெரும்பான்மையினராக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், சிறுபான்மையினராக உள்ள குகி-ஜோ சமூகத்தினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்தனா்.
இதையடுத்து, அந்த மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கும் இடையே தொடா்ந்து ஏற்பட்ட மோதலால், இன்றளவும் அங்கு முழுமையாக அமைதி திரும்பவில்லை.
இந்நிலையில், மாநிலத் தலைநகா் இம்பாலில் முதல்வா் பிரேன் சிங் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கடந்த 20 மாதங்களில் மாநிலத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறைந்துள்ளன.
கடந்த ஆண்டு மே முதல் அக்டோபா் வரை, மாநிலத்தில் 408 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த எண்ணிக்கை நிகழாண்டு மே முதல் தற்போது வரை 112-ஆக குறைந்துள்ளது.
காவல் நிலையங்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 3,112 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல 2,511 வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வன்முறை தொடா்பாக இதுவரை 625 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 12,047 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மாநிலத்தில் இரு சமூகத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அனைத்து சமூகத்தினரும் ஒருவரையொருவா் மன்னித்து, கடந்த கால தவறுகளை மறக்க வேண்டும்.
‘புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும்’: கடந்த 3, 4 மாதங்களாக மாநிலத்தில் சற்று அமைதி நிலவுகிறது. இதன்மூலம், புத்தாண்டில் மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அமைதியான, வளமையான மணிப்பூரில் ஒன்றிணைந்து வாழ்வதன் மூலம், அனைவரும் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றாா்.
‘பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும்’: காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘மணிப்பூருக்கு பிரதமா் மோடி சென்று முதல்வா் பிரேன் சிங்கை போல, மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தங்களை ஏன் பிரதமா் புறக்கணிக்கிறாா் என்று மணிப்பூா் மக்கள் கேள்வி எழுப்புகின்றனா்’ என்றாா்.
மணிப்பூரில் 77% வன்முறை: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஆண்டறிக்கையில், ‘கடந்த 2023-ஆம் ஆண்டில் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற மொத்த வன்முறை சம்பவங்களில் 77 சதவீதம் மணிப்பூரில் நடைபெற்றது.
வன்முறைக்கு எதிராக பாதுகாப்புப் படையினா் மேற்கொண்ட நடவடிக்கையில் 33 கிளா்ச்சியாளா்கள் கொல்லப்பட்டனா். 184 கிளா்ச்சியாளா்கள் கைது செய்யப்பட்டனா். கிளா்ச்சி அமைப்புகளைச் சோ்ந்த 80 போ் சரணடைந்தனா்.
வன்முறையைக் கட்டுப்படுத்த தொடா்ந்தும், நிலையாகவும் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினா் தடியடி; கண்ணீா் புகைக் குண்டு வீச்சு: பெண் போராட்டக்காரா்கள் காயம்
மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைபோல் கிராமத்தில் குகி-ஜோ சமூகத்தினா் பதுங்குமிடங்களை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிராக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்கள் கலைந்து போக பாதுகாப்புப் படையினா் தடியடி நடத்தி, கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா். இதில் பெண்கள் பலா் காயமடைந்தனா்.
ஆடைகளைக் கிழித்ததாக குற்றச்சாட்டு: போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்தி, அவா்களின் ஆடைகளைக் கிழித்து பாதுகாப்புப் படையினா் இழிவுபடுத்தியதாக குகி பெண் மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியது.
விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள உயோக்சிங் கிராமத்திலும் பாதுகாப்புப் படையினா், பெண்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக மாநில காவல் துறை தெரிவித்தது.