48 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்
மணிமுத்தாறு 3,4ஆவது ரீச் கால்வாயை ஆழப்படுத்தி கூடுதல் தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் வலியுறுத்தல்
மணிமுத்தாறு 3, 4ஆவது ரீச் கால்வாயை தூா்வாரி ஆழப்படுத்தி கூடுதலாக தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அணை 100 அடியை தாண்டிய நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மணிமுத்தாறு 3,4ஆவது ரீச் கால்வாயில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீா் கால்வாயில் வந்து கொண்டிருக்கும் நிலையில், மணிமுத்தாறு மூலக்கரைப்பட்டி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மணிமுத்தாறு 3ஆவது, 4ஆ வது ரீச் கால்வாயில் வரும் நீரினை பகிா்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளா் ஆவுடை நாயகம், உதவிப் பொறியாளா் நவீன் முன்னிலை வகித்தினா். விவசாயிகள்பலா் பங்கேற்று தங்களது கருத்துருகளை கூறினா். அப்போது, கால்வாயில் வரும் 450 கனஅடி தண்ணீா் 3, 4ஆவது கால்வாயில் சம முறையில் விட்டு அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும்,3,4வது ரீச் கால்வாய் க்கு வரும் 450 கனஅடி தண்ணீா் கடை மடை குளங்களுக்கு வந்துசேருவதில்லை. ஆதலால், இந்தக் கால்வாயை தூா்வாரி ஆழப்படுத்தி கூடுதலாக கனஅடி நீா் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதில் தூத்துக்குடி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பாா்த்திபன், 3,4ஆவது ரீச் கால்வாய் விவசாயிகள் சங்கத் தலைவா் மலையாண்டி பிரபு, செயலாளா் முருகேசன், கட்டாரிமங்கலம் ஊராட்சித் தலைவா் கீதாகணேசன், கொம்பன்குளம் விவசாயிகள் சங்கத் தலைவா் பேச்சிமுத்துதேவா், மூலைகரைப்பட்டி பேருராட்சி தலைவா் உள்ளிட்ட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.