ஜூனியா் மகளிா் ஆசிய ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 21 கோடி மக்கள் பலன்: நிதித் துறை
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் பலனடைந்துள்ளதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம், காப்பீடு செய்த நபர் திடீரென இறந்தால், அரசு அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது. இதற்காக மிகக் குறைந்த அளவிலான தொகையே ஆண்டுக்கு ஒருமுறை பெறப்படுகிறது.
18 முதல் 50 வயது வரை உள்ள அனைவரும் வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தின் மூலம் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
நிதித் துறை அமைச்சகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீடு திட்டமானது, இதுவரை 21 கோடி மக்களுக்கு அவர்கள் குடும்பத்தின் நிச்சயமற்ற நிதி காலத்திற்கு உதவும் வகையில் ரூ.2 லட்சம் கொடுத்துள்ளது. அக்டோபர் 20ஆம் தேதி வரை இத்திட்டத்தில் 21.67 கோடி பேர் இணைந்துள்ளனர்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்ற விபத்து காப்பீடு திட்டத்தில் 47.59 கோடி மக்கள் இணைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இதில், நவ. 20வரை 1.93 லட்சம் பேர் தொகையைப் பெற்று பலன் அடைந்துள்ளனர்.
மக்கள் நிதித் திட்டத்தின் (பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா) மூலம் 54 கோடி மக்கள் பலன் அடைந்துள்ளனர். வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ளவர்களில் 55.6% பெண்கள் (29.56 கோடி). இதில், 66.6% (35.37 கோடி) ஜன் தன் வங்கிக் கணக்குகள் கிராமப் புறங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.