மனைவியைத் துன்புறுத்தியவர் திட்டமிட்டு கொலை! விசாரணையில் திருப்பம்!
மகாராஷ்டிரம், தானேயில் தன் மனைவியைத் துன்புறுத்தியவரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்,
கடந்த ஜன.11 சுகந்த் ஷத்ருகனா பரிதா (29) என்பவர் நரேஷ் ஷம்பு பகத் வீட்டில் உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் அவரது உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக உடல் உபாதைகளால் எதிர்பாராமல் அவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியது.
பகத் மீது சந்தேகித்த காவல்துறையினர் திடுக்கிடும் தகவல்களைக் கண்டறிந்தனர். கொலை செய்யப்பட்ட சுகந்த அடிக்கடி தங்கள் வீட்டிற்கு வந்து தனது மனைவியைத் துன்புறுத்தியதாக பகத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் சுகந்த் மற்றும் பகத் இடையே மட்டுமல்லாமல் பகத் மற்றும் அவரது மனைவிக்குமிடையேயும் பிரச்னைகள் எழுந்துள்ளன. இதனால் அவரைக் கொலை செய்ய பகத் திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஜன.10 சுகந்த்தை தனது வீட்டிற்கு அழைத்த பகத், அவரை மது அருந்தச் செய்து பின் அவரது தலையில் சுத்தியல் மற்றும் இரும்புக் கம்பியால் அவரைத் தொடர்ந்து தாக்கியதாக கூறியுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தவுடன் அவரே காவல்துறைக்கு தகவலும் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரிவு 103ன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்