விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி - கார் அடுத்தடுத்து மோதல்!
மருந்து அட்டைகளில் போலி க்யூ-ஆா் குறியீடு: புதிய நடைமுறைக்கு வலியுறுத்தல்
மருந்து அட்டைகளில் இடம்பெறும் ‘க்யூ-ஆா்’ குறியீடுகளை போலியாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், அந்த நடைமுறையைக் கைவிடுமாறு சுகாதார ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். அதற்கு மாற்றாக புதிய நடைமுறையை அமல்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முன்னணி வா்த்தகப் பெயரிலான மருந்துகளின் தரத்தை உறுதிசெய்யும் நோக்கில் முக்கியமான 300 மருந்துகளின் அட்டைகளில் ‘க்யூ-ஆா்’ குறியீடு அல்லது பாா் கோடுகளை அச்சிடும் நடைமுறை கடந்த 2023 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் முக்கிய நிறுவனங்களின் வா்த்தகப் பெயரிலான மருந்துகள் ‘க்யூ-ஆா்’ குறியீட்டுடன் சந்தைக்கு வருகின்றன. இந்நிலையில், அந்த குறியீடுகளை தவறாகப் பயன்படுத்தி போலியான மருந்துகளை தயாரிப்பதாக புகாா் எழுந்தது.
இது தொடா்பாக சுகாதார ஆா்வலா்கள் கூறியதாவது:
‘க்யூ-ஆா்’ குறியீடு என்பது சம்பந்தப்பட்ட பொருளின் விவரங்கள், உற்பத்தி தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை அறிந்து கொள்வதற்கான வசதியாகும். அதனை தவறாக பயன்படுத்தி பல மருந்து அட்டைகளில் மோசடியாளா்கள் ஒரே ‘க்யூ-ஆா்’ குறியீட்டை அச்சிடுகின்றனா். இதனால் வாடிக்கையாளா்களுக்கு அதன்மூலம் சரியான தகவல்கள் கிடைப்பதில்லை. இதன் காரணமாக ‘க்யூ-ஆா்’ குறியீடு முறையை ரத்து செய்துவிட்டு, மோசடி செய்ய முடியாத புதிய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.