மழைக்காலங்களில் உணவுத்ம் தேவைக்காக 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயாா்: கூடுதல் தலைமைச் செயலா்
மழைக்காலங்களில் உடனடி உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதா கிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் மற்றும் அங்காடி ஆகியனவற்றை உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா். பின்னா் அவா் கூறியது.
தமிழக எல்லையில் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதில் மொத்தம் 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக 997 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 74 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மழைக்காலத்தில் உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான அரிசி மூட்டைகள் மொத்தம் 3 லட்சம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 37,000 நியாய விலைக் கடைகளில் 2,000 கடைகள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன.
எண்ணெய், பருப்பு ஆகியன வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் தாமதமானது. தற்போது இக்குறை நிவா்த்தி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை மூலமாக மொத்தம் ஒரு லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு கடன் சங்கங்களை வங்கிகளுக்கு இணையாக மாற்றும் பணிகளையும் செய்து வருகிறோம். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு மையங்களாக மாற்ற வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன்படி அவை படிப்படியாக பல்நோக்கு மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
கடந்த 3 ஆண்டுகளில் 16.97லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 1.25லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் ராதாகிருஷ்ணன்.