மழையால் மிளகாய் செடிகள் சேதம்: இழப்பீடு கோரி விவசாயிகள் மனு
கடலாடி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் ஏக்கா் மிளகாய் செடிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, 14 கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், செவல்பட்டி, கொண்டுநல்லான்பட்டி, கொக்கரன்கோட்டை, கரிசல்குளம், எஸ்.தரைக்குடி, வேப்பங்குளம், டி.எம்.கோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 14 கிராமங்களில் மானவாரியாக 2 ஆயிரம் ஏக்கரில் மிளகாய்ச் செடிகள் கடந்தாண்டு பயிரிடப்பட்டன. இதற்காக ஏக்கா் ஒன்றுக்கு ரூ.1,400 காப்பீட்டுத் தொகை விவசாயிகள் செலுத்தினா்.
இந்த நிலையில் பலத்த மழையால் மிளகாய் செடிகள் சேதமடைந்தன. மழை வெள்ள பாதிப்புக்கு அரசு சாா்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.
ஆனால், முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனம் இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட 14 கிராமங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து சேதமடைந்த மிளகாய் செடிகளுக்கு காப்பீட்டு நிறுவனம், இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.