தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!
மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது... எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதிர்ப்பு; கிராம சபைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு
கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 157 ஊராட்சிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் தலைமையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று (ஜனவரி 26) கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அந்த வகையில், கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சி சார்பில் பெரியார் நகர் ஆரம்ப பள்ளி வளாகத்தில் நேற்று காலை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த, கிராம சபைக் கூட்டத்திற்கு வருகை தந்த அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆண்டாங்கோயில் கீழ்பாகம் கிராமத்தைக் கரூர் மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
இதே கூட்டத்தில், தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் மற்றும் கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கண்ணையன் உள்ளிட்ட தி.மு.க-வினர், ‘கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோயில் கீழ்பாகம் கிராமத்தை இணைக்க வேண்டும்’ எனக் கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அ.தி.மு.க-வின் அரசியல் பித்தலாட்டமே எனும் துண்டறிக்கையைப் பொதுமக்களிடம் வழங்கினர்.
"அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில்தான் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோயில் கீழ்பாகம் இணைப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பொழுது, அரசாணை வெளிவந்த பிறகு எதிர்ப்பது ஏன்?" எனக்கூறி அங்கிருந்த தி.மு.க-வினர், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பார்த்து கேள்வி எழுப்பினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த கரூர் நகரக் காவல் துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார், இருதரப்பையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு, இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”தி.மு.க-வினரும், போலீஸாரும், அதிகாரிகளும் தி.மு.க-வின் மற்றொரு அணி போல் செயல்படுகிறார்கள்" என்று குற்றம்சாட்டினார்.
அதேநேரம், இது குறித்து தி.மு.க தான்தோன்றிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர், “அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது அரசியல் லாபத்திற்காகப் பணம் கொடுத்து சிலரை அழைத்து வந்து கிராம சபைக் கூட்டத்தில், மாநகராட்சி இணைப்புக்கு எதிராகக் கோரிக்கை மனு அளித்துக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்” என்று குற்றம்சாட்டினர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY