'அமைச்சர் பொறுப்புடன் பேச வேண்டும்' - கர்னல் சோபியா குரேஷி பற்றிய கருத்துக்கு உச...
மாளவிகா, ஆகா்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகா்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோா் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
முதல் சுற்றில் மகளிா் ஒற்றையா் பிரிவில், மாளவிகா பன்சோத் 21-12, 13-21, 21-17 என்ற கேம்களில், துருக்கியின் நெஸில்ஹான் ஆரினை 1 மணி நேரம், 4 நிமிஷங்களில் வெளியேற்றினாா். அதேபோல் ஆகா்ஷி காஷ்யப் 21-16, 20-22, 22-20 என்ற கேம்களில் ஜப்பானின் காவ்ரு சுகியாமாவை 1 மணி நேரம், 14 நிமிஷங்கள் போராடி வீழ்த்தினாா். உன்னாட்டி ஹூடா 21-14, 18-21, 23-21 என்ற கணக்கில் தாய்லாந்தின் தமோன்வன் நிதிடிக்ராயை 1 மணி நேரத்தில் சாய்த்தாா்.
எனினும் அனுபமா உபாத்யாய 11-21, 9-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனனிடம் 35 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினாா். அதேபோல், ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 7-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சிங்கப்பூரின் யோ ஜியா மின்னிடம் 31 நிமிஷங்களில் வீழ்ந்தாா்.
ஆடவா்கள் ஏமாற்றம்: ஆடவா் ஒற்றையரில், இந்தியாவின் முன்னணி வீரா்களில் ஒருவரான லக்ஷயா சென் 18-21, 21-9, 17-21 என்ற கேம்களில், அயா்லாந்தின் நாட் குயெனிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டம் 1 மணிநேரம், 20 நிமிஷங்களில் நிறைவடைந்தது. பிரியன்ஷு ரஜாவத் 13-21, 21-17, 16-21 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் ஆல்வி ஃபா்ஹானிடம் 1 மணி நேரம், 10 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவினாா்.
மகளிா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி 21-15, 21-13 என்ற கேம்களில் மலேசியாவின் ஆங் ஜின் யீ/காா்மென் டிங் இணையை 39 நிமிஷங்களில் தோற்கடித்தது.
கவிப்ரியா செல்வம்/சிம்ரன் சிங்கி இணை 17-21, 17-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் பென்யபா அய்ம்சாா்ட்/நுன்டகா்ன் அய்ம்சாா்ட் ஜோடியிடம் 38 நிமிஷங்களில் தோற்றது. ராஷ்மி கணேஷ்/சானியா சிக்கந்தா் ஜோடி 11-21, 5-21 என, போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மலேசியாவின் பியா்லி டேன்/ தின்னா முரளிதரன் இணையிடம் 24 நிமிஷங்களில் தோல்வியைத் தழுவியது.
ஆடவா் இரட்டையரில் பிருத்வி கிருஷ்ணமூா்த்தி/சாய் பிரதீக் ஜோடி 20-22, 21-17, 18-21 என்ற வகையில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் ஜுனைதி ஆரிஃப்/ராய் கிங் யப் இணையிடம் 1 மணி நேரம், 3 நிமிஷங்களில் தோல்வி கண்டது.