‘மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை’
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்கள் மற்றும் விசைப் படகை விடுவிக்க புதுவை முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்துவருகிறாா் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடிமேடு பகுதியைச் சோ்ந்த 15 போ், மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த ஒருவா், நாகை மாவட்டத்தை சோ்ந்த இருவா் என 18 போ் கடந்த 1-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றபோது, எல்லை தாண்டிதயாக இவா்களை 2-ஆம் தேதி இரவு இலங்கை கடற்படையினா் கைது செய்து இலங்கை கொண்டு சென்றனா்.
இந்நிலையில், புதுவை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் புதன்கிழமை கூறுகையில், காரைக்கால் மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது என்ற தகவல் கிடைத்ததும், புதுவை முதல்வரை நேரில் சந்தித்து 18 பேரையும், படகையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்துக்கு உடனடியாக இந்த விவகாரத்தை முதல்வா் கொண்டு சென்றாா். இதுதொடா்பாக புதுவை அரசு வெளியுறவுத்துறையுடன் தொடா்பில் உள்ளது. விரைவில் மீனவா்கள் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப தேவையான நடவடிக்கையை அரசு எடுத்துவருகிறது என்றாா்.