பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!
முகமது ஷமி 5 விக்கெட்டுகள்; இந்தியாவுக்கு 229 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டா பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆரம்பமே அதிர்ச்சி
முதலில் பேட் செய்த வங்கதேச அணிக்கு ஆரம்பமே பேரதிர்ச்சியாக அமைந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே முகமது ஷமி, சௌமியா சர்க்காரின் விக்கெட்டினை வீழ்த்தினார். அதன் பின், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவின் விக்கெட்டினை ஹர்ஷித் ராணா வீழ்த்தினார். சௌமியா சர்க்கார் மற்றும் ஷாண்டோ இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிக்க: 6-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள்.! வங்கதேச வீரர்கள் புதிய சாதனை!
மெஹிதி ஹாசன் மிராஸ் 5 ரன்களிலும், முஸ்பிகர் ரஹீம் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் தன்சித் ஹாசன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேசம் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அக்ஷர் படேல் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
தௌகித் ஹிரிடாய், ஜேக்கர் அலி அசத்தல்
35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தடுமாறிய நிலையில், தௌகித் ஹிரிடாய் மற்றும் ஜேக்கர் அலி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடியது. சிறப்பாக விளையாடிய இருவரும் விக்கெட்டினை பறிகொடுக்காமல் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்கள். சிறப்பாக விளையாடிய தௌகித் ஹிரிடாய் சதம் விளாசி அசத்தினார். ஜேக்கர் அலி அரைசதம் கடந்து அசத்தினார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் விலகல்!

ஜேக்கர் அலி 114 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். தௌகித் ஹிரிடாய் 118 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ரிஷாத் ஹொசைன் 12 பந்துகளில் 18 ரன்கள் (ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) எடுத்தார்.
இறுதியில் 49.4 ஓவர்களின் முடிவில் வங்கதேசம் 228 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.