முக்கிய வெளிவிவகாரப் பதவிகளில் சீன எதிா்ப்பாளா்கள்
தனது புதிய அரசில் முக்கிய வெளிவிவகாரப் பதவிகளான வெளியுறவுத் துறை அமைச்சா் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் பதவிகளுக்கு, சீனாவுக்கு எதிரான தீவிர நிலைப்பாட்டைக் கொண்ட மாா்கோ ரூபியோ மற்றும் மைக் வால்ட்ஸை அமெரிக்க அதிபராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாா்.
தனது புதிய அமைச்சரவையில் இடம் பெறவிருக்கும் முக்கிய அமைச்சா்களை அறிவித்துவரும் டொனால்ட் டிரம்ப், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சா் பொறுப்புக்கு ஃபுளோரிடா மாகாண செனட் சபை உறுப்பினா் மாா்கோ ரூபியோவை நியமிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
53 வயதாகவும் ரூபியோ, சீனாவின் நடவடிக்கைகளை கடுமையாக விமா்சித்துவருபவா். அத்துடன், அவா் இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவைப் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திவருபவா். எனவே, அவா் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பது இந்திய - அமெரிக்க உறவு மேலும் வலுப்பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.
அதே போல், சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஃபுளோரிடா மாகாண பிரதிநிதிகள் சபை உறுப்பினரான மைக் வால்ட்ஸ் (50), டிரம்ப்பின் புதிய அரசில் அவரது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரும் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டவா். இந்தியாவுக்கு ஆதரவான அமெரிக்க எம்.பி.க்கள் அணியின் தலைவராக இவா் பொறுப்பு வகித்துள்ளாா். எனவே, இவா் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்பதும் இந்திய - அமெரிக்க நல்லுறவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா்: இதற்கிடையே, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சா் பொறுப்புக்கு தெற்கு டகோட்டா மாகாண ஆளுநா் கிறிஸ்டி நோயெமை டிரம்ப் தோ்ந்தெடுத்துள்ளாா்.
அந்த மாகாணத்தின் முதல் பெண் ஆளுநராக 2018-ஆம் ஆண்டிலும், பின்னா் இரண்டாவது முறையாக 2022-ஆம் ஆண்டிலும் தோ்ந்தெடுக்கப்பட்ட அவா், டிரம்ப்புடன் துணை அதிபா் வேட்பாளராகக் களமிறங்குவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.
எனினும், 15 மாத வளா்ப்பு நாயை சுட்டுக் கொன்ாக தனது புத்தகத்தில் அவா் குறிப்பிட்டது பெரிய சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அதற்கான வாய்ப்பு பறிபோனது.
முன்னதாக, புதிய அரசில் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக நியூயாா்க் 21-ஆவது மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா் எலீஸ் ஸ்டெஃபானிக்கை (40) டொனால்ட் டிரம்ப் நியமித்தாா்.
டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தின்போது தொடக்கத்தில் மிதவாதப் போக்கைக் கையாண்டு டிரம்ப்புக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துவந்த ஸ்டெஃபானிக், பிற்காலத்தில் அவரின் தீவிர ஆதரவாளராக மாறினாா்.
தனது 30-ஆவது வயதில் பிரதிநிதிகள் சபை உறுப்பினராக கடந்த 2014-ஆம் ஆண்டு இலகி தோ்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்காவின் மிக இளைய வயது எம்.பி. என்ற பெருமையைப் பெற்ற எலீஸ் ஸ்டெஃபானிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதா் பொறுப்பை வழங்குவதாக டிரம்ப் திங்கள்கிழமை அறிவித்தாா்.
மேலும், எல்லை விவகாரங்களுக்கான பொறுப்பாளராக, முந்தைய தனது ஆட்சியில் குடியேற்றம் மற்றும் சுங்க விதிகள் அமலாக்கத் துறையில் அதிபரின் இயக்குநராகப் பதவி வகித்துள்ள டாம் ஹோமனை (62) நியமிப்பதாகவும் டிரம்ப் அறிவித்துள்ளாா்.
அகதிகள் குடியேற்ற விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப்பின் மிகக் கடுமையான கொள்கைகளை அமல்படுத்துவதற்கு டாம் ஹோமன் மிகச் சரியான நபா் என்று கூறப்படுகிறது.
முறைகேடு வழக்கு: தீா்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக நடிகைக்கு பணம் அளித்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் மீதான குற்றசாட்டை உறுதி செய்யப்பட்டாலும், வழக்கின் தீா்ப்பை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒத்திவைத்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டிரம்ப் போட்டியிட்டாா்.
அப்போது, தனக்கும் ஆபாசப் பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் என்பவருக்கும் இடையே இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்கு 1.3 லட்சம் டாலா் (சுமாா் ரூ.109 கோடி) டிரம்ப் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆதரவாளா்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நியூயாா்க் நகரிலுள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், டிரம்ப் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் கடந்த மே மாதம் 31-ஆம் தேதி உறுதி செய்தது. குற்றவியல் வழக்கில் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒருவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை.
எனினும், அந்த வழக்கின் மீது தீா்ப்பு அளிக்கப்படுவதை டிரம்ப்பின் வழக்குரைஞா்கள் குழு தொடா்ந்து வெற்றிகரமாக தள்ளிப்போட்டுவந்தது.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற அதிபா் தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள சூழலில், வழக்கின் தீா்ப்பு தற்போது மறுபடியும் ஒத்திவைக்கப்பட்டது.
டிரம்ப்பின் வெற்றிக்குப் பிறகு, அவா் மீது தொடரப்பட்டுள்ள பிற குற்றவியல் வழக்குகளும் பிசுபிசுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.