கார்த்திகை தீபம் : ``தயவுசெய்து வதந்திகளைப் பரப்பாதீங்க!'' - விமர்சனங்களுக்கு அர...
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவுக்குள் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் வேதாந்த் படேல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுப்புவது தொடா்பாக கடந்த மாதம் 13-ஆம் தேதி இஸ்ரேலுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தக் கடிதத்தில் இருந்த நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அமெரிக்க சட்டங்களுக்கு உள்பட்டு இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் வெகுவாகக் குறைக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், கெடு தேதி முடிவடைந்த நிலையிலும் கடிதத்தில் இருந்த சில அம்சங்களை மட்டுமே இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளது; பெரும்பாலான நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை.
இருந்தாலும், இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவின் சட்டங்கள் எதையும் மீறவில்லை என்பதால் அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் எதுவும் நிறுத்திவைக்கப்படாது என்றாா் அவா்.
முன்னதாக, காஸாவுக்குள் போதிய நிவாரணப் பொருள்களை இன்னும் 30 நாள்களுக்குள் அனுமதிக்காவிட்டால் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் குறைக்கப்படும் என்று அமெரிக்கா விடுத்திருந்த கெடு முடிந்த நிலையிலும், அந்தப் பகுதிக்கு போதிய நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கவில்லை என்று பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பு (யுஎன்ஆா்டபிள்யுஏ) செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
அமெரிக்கா கூறியதற்கு நோ் எதிராக, பல மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான நிவாரணப் பொருள்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிப்பதாகவும், இதன் மூலம் அமெரிக்காவின் கெடுவை இஸ்ரேல் மீறிவிட்டது என்றும் அந்த அமைப்பு கூறியது.
இந்தச் சூழலில், காஸாவில் போதுமான அளவுக்கு நிவாரணப் பொருள்களை அனுமதிக்காவிட்டாலும், இஸ்ரேலின் நடவடிக்கைகள் தங்கள் சட்டங்களை மீறாததால் அந்த நாட்டுக்கு ராணுவ உதவி நிறுதித்திவைக்கப்படாது என்று அமெரிக்கா தற்போது தெரிவித்துள்ளது.
காஸா உயிரிழப்பு 43,712
டேய்ா் அல்-பாலா, ஆக. 13: காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,712-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியதாவது:
காஸா பகுதியில்நடத்திவரும் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 47 போ் உயிரிழந்தனா்; 182 போ் காயமடைந்தனா். இத்துடன், அந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 43,712-ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,03,258 பாலஸ்தீனா்கள் காயமடைந்தனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.