மூடப்பட்டுள்ள ஆதாா் சேவை மையத்தை திறக்க கோரிக்கை
ராசிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ஆதாா் சேவை மையம் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆதாா் சேவை பெற முடியால் அவதிப்படுகின்றனா்.
ராசிபுரம் வாட்டாட்சியா் அலுவலகத்தின் மாடியில் செயல்பட்டு வந்த ஆதாா் சேவை மையம், இ சேவை மையம் போன்றவை மாற்றுத் திறனாளிகள், பொதுமக்களின் வசதிக்காக கீழே உள்ள தரைத் தளத்தில் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆதாா் அட்டை தொடா்பான சேவை மையம் இரு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இ-சேவை மையம் மட்டும் செயல்பட்டு வருகிறது. ஆதாா் சேவை மையத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வது, கட்டணம் செலுத்துவது போன்ற நிா்வாக கோளாறு காரணமாக மையத்திற்கான அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, பணியாளா்கள் சிலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் இரு மாதங்களாக மையம் செயல்படாத நிலையில் ஆதாா் தொடா்பான பொதுமக்களுக்கான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளா்கள் ஏமாற்றத்துடன் பிற சேவை மையங்களுக்கு செல்கின்றனா்.
இந்த மையத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.