ரூ. 100 கோடி இணைய மோசடி: சீனாவைச் சேர்ந்த நபர் தில்லியில் கைது!
தில்லி ஷாதாரா மாவட்டத்தில் ரூ. 100 கோடி இணைய மோசடியில் தொடர்புடைய சீன நாட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தில்லியில் சஃப்தார்ஜுங் பகுதியில் வசித்து வந்த சீனாவைச் சேர்ந்த நபரான ஃபாங் செஞ்சின், வாட்ஸப் குழுக்கள் வழியே ஆன்லைன் பங்கு வர்த்தகம் மூலம் ரூ. 100 கோடிக்கும் மேல் மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சைபர் குற்றங்களுக்கான இணையதளத்தில் புகார் பதிவிடப்பட்டுள்ளது. அதில் புகாரளித்தவர் கூறியுள்ள தகவலின்படி, அவர் மோசடியான பங்குச்சந்தை பயிற்சி வகுப்புகளில் ஈர்க்கப்பட்டு, ரூ. 43.5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். இந்த முதலீடுகள் பல பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்பவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்த விசாரணையில், அவர் பணத்தை அனுப்பிய வங்கி கணக்குகளின் விவரங்களையும், மோசடி செய்தவர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்களையும் காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
இதையும் படிக்க | மணிப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் சவப்பெட்டிகளுடன் பேரணி!
இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி கூறுகையில் ”மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட தில்லியில் உள்ள மஹா லட்சுமி டிரேடர்ஸ் வங்கி கணக்கை நாங்கள் ஆய்வு செய்தோம். அந்த நிறுவனத்தின் கணக்கின் மூலம் ரூ. 1.25 லட்சம் மதிப்பிலான மோசடி பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
மேற்கொண்டு விசாரித்ததில், ஒரு மொபைல் எண் ஃபாங் செஞ்சின் என்ற சீன நாட்டவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த மொபைல் போன்கள், வாட்சப் உரையாடல்களை ஆராய்ந்ததன் மூலம் அவர் பண மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட சீன நாட்டவரிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைமில் ஆந்திரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பதிவான வேறு சில மோசடி குற்றங்களிலும் அவர் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இதுபோன்ற, 17 குற்றங்கள் சைபர் கிரைம் தளத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்து ஃபின்கேர் வங்கியின் ஒரே கணக்குடன் தொடர்புடையவை. இதில், மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு மொத்தமாக ரூ. 100 கோடிக்கும் மேல் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க | உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷிய அதிபர் அனுமதி!
குற்றம் சாட்டப்பட்ட ஃபாங் செஞ்சினிடம் மேலும் விசாரணை நடத்தியதில், அவர் ஏப்ரல் 2020 இல் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திவானி நிறுவனத்தில் பணிபுரிய வேலைக்கான விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில், செஞ்சின் விற்பனையாளராக பணிபுரிந்த நிறுவன உரிமையாளரின் புகாரின் பேரில் பதிவுசெய்யப்பட்ட மோசடி வழக்கில் ஆந்திரப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 7 மாதங்கள் திருப்பதி சிறையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசா ஆந்திர காவல்துறையினரால் முன்னரே கைப்பற்றப்பட்டதாகவும், தில்லியில் அவரைக் கைது செய்த போது அவரிடம் தகுந்த விசா இல்லை என்றும் கூறப்படுகிறது.