ரூ.52 கோடிக்கு ஏலம் போன வாழைப்பழம்; கலைப்படைப்பை சாப்பிட்ட தொழிலதிபர்! - அப்படியென்ன ஸ்பெஷல்?
இணையத்தில் மிக பிரபலமானது இந்த கலைப்படைப்பு. இது பல மீம்களிலும் இடம்பெற்றிருக்கிறது. ஜஸ்டின் சன் என்ற தொழிலதிபர் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் ஆறு கோடீஸ்வரர்களுடன் போட்டிப்போட்டு, 6.2 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடி ரூபாய்) இந்த வாழைப்பழ கலைப்படைப்பை வாங்கினார்.
வெள்ளை நிற பிண்ணனியில் கிரே டேப் ஒட்டப்பட்ட வாழைப்பழம்தான் இந்த கலைப்படைப்பு. இதற்கு காமடியன் என்று பெயர் வைத்துள்ளார், இதை உருவாக்கிய மவுரிசியோ கேட்டலான்.
இதை வாங்கும்போதே இந்த வாழைப்பழத்தைச் சாப்பிடுவதாக உறுதியளித்திருந்த ஜஸ்டின் சன், ஹாங்காங்கில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அதைச் சாப்பிட்டார்.
இந்த படைப்பில் இருக்கும் வாழைப்பழம் அழுகிவிடாதா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கலாம். ஒவ்வொருமுறை இந்த படைப்பு காட்சிப்படுத்தப்படும்போதும் இதிலிருக்கும் வாழைப்பழம் மாற்றப்படும்.
இதைக் காட்சிப்படுத்தும் உரிமையைப் பெற்றுள்ள ஜஸ்டின் சன், வாழைப்பழத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன் 2019ம் ஆண்டு ஒரு கலைஞரும், 2023 தென் கொரிய மாணவர் ஒருவரும் இந்த பழத்தைச் சாப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்கள் பணம் கொடுத்து இதை வாங்கவில்லை.
இதை சாப்பிட்டது குறித்து, "இதை சாப்பிடுவதும் இந்த கலைப்படைப்பின் வரலாற்றில் இடம்பெறும். மற்ற வாழைப்பழங்களை விட இது எனக்கு சுவையாக இருந்தது" என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் ஜஸ்டின் சன்.
இதைச் சாப்பிடும்போது அழுகியிருக்குமோ என்ற கேள்வி தனக்கு எழுந்ததையும் கூறியுள்ளார்.
தான் சாப்பிட்டதுடன், பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்த அனைவருக்கும் சாப்பிட ஒரு வாழைப் பழமும் ஒரு டேப்பும் கொடுத்தார் ஜஸ்டின் சன்.
34 வயதான ஜஸ்டின் சன் ஒரு கிரிப்தோ கரன்சி தொழிலதிபர். ட்ரான் என்ற பிளாக் செயின் நெட்வொர்க்கை நடத்துகிறார். இவர் மீது அமெரிக்காவில் ஒரு மோசடி வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.