Bill Gates : `இந்தியா ஓர் ஆய்வகம்...' - பில் கேட்ஸின் பேச்சால் வெடித்திருக்கும் சர்ச்சை!
அமெரிக்காவின் பிரபல இணைய தொழில்முனைவோர், போட்காஸ்டர், எழுத்தாளர் ரீட் காரெட் ஹாஃப்மேன் (Reid Hoffman). இவர் சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவரும், உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவருமான பில்கேட்ஸை பேட்டி எடுத்திருந்தார். அதில் பேசிய பில்கேட்ஸ், ``கடினமான விஷயங்கள் ஏராளமாக இருக்கும் ஒரு நாட்டிற்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டு. சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி ஆகியவை மேம்பட்டு அவை போதுமான அளவு நிலையாக உள்ளன. இன்னும் அவை மேம்படவேண்டியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் தங்கள் சொந்த அரசுக்கான வருவாயைப் பெறுவார்கள்.
எனவே, தற்போது இந்தியா ஒரு வகையான ஆய்வகம். ஒன்றை நீங்கள் இந்தியாவில் செயல்படுத்தினால் அதை மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். அதனால்தான் எங்கள் அறக்கட்டளைக்கான பெரிய அலுவலகம் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் உள்ளது. நாங்கள் செய்யும் பெரும்பாலான பைலட் ரோல் அவுட் (ஒரு தயாரிப்பை குறைந்தபட்சமாக தயாரித்து, அதை சோதனையாக வெளியிடும் செயல்முறையாகும்) இந்தியாவில் உள்ள எங்கள் பங்குதாரர்களுடன் இருக்கிறது" எனப் பேசினார்.
பில்கேட்ஸின் இந்தப் பேச்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வைரலானது. பலரும் பில்கேட்ஸின் கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர். இது தொடர்பாக எக்ஸ் தளப் பயனர் ஒருவர், ``பில்கேட்ஸ், இந்தியாவில் உள்ளவர்களை பரிசோதனைக்கானவர்களாகக் கருதுகிறார். அதாவது அவரின் முயற்சிகள் இந்தியாவில் வெற்றிப்பெற்றப் பிறகு அவை அமெரிக்காவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன." எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.