`தனுஷ், நயன்தாரா, சிவகார்த்திகேயன்' - பிரபலங்கள் பங்கேற்ற கவின் கேர் இல்லத் திரு...
`வனவாசத்தில் இருக்கிறேன்; விரைவில் சீதா ராமனாக வருவேன்..!' - நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் கடிதம்
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்தது, இரட்டை இலை சின்னத்தை வாங்கித்தருவதாக கூறி டி.டி.வி தினகரனிடம் மோசடி செய்தது உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக சுகேஷ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குற்றங்கள் மூலம் சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதியை பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் இதர நடிகைகளுக்கு செலவு செய்தார். திகார் சிறையில் இருந்து கொண்டு நடிகைகளை சிறைக்கே வரவைத்து அவர்களுக்கு பணமும், பரிசும் கொடுத்து மகிழ்ச்சி படுத்தினார். இதற்கு துணை போன டெல்லி திகார் சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் சுகேஷ் லஞ்சம் கொடுத்தார். அந்த அதிகாரிகள் பின்னர் சஸ்பெண்ட், பணியிடமாற்றம் போன்ற தண்டனைக்கு உள்ளானார்கள். சுகேஷ் பரோலில் வந்த போது ஜாக்குலின் தனி விமானத்தில் சென்று சென்னையில் சுகேஷை சந்தித்து விட்டு வந்தார்.
அவர்கள் இருவரும் தம்பதியை போன்று வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி சுகேஷ் சிறையில் இருந்து கொண்டு நடிகை ஜாக்குலினுக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது தீபாவளி வாழ்த்து சொல்லி ஒரு கடிதத்தை சுகேஷ் சந்திரசேகர் ஜாக்குலினுக்கு எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், ``ராமர் வனவாசம் முடிந்து சீதையுடன் வந்தது போன்று நானும் சிறிய வனவாசம் முடிந்து எனது சீதை ஜாக்குலினுக்காக விரைவில் திரும்ப வருவேன். ஜாக்குலின் மீதான தனது காதல் பற்றி உலகம் அறிந்திருக்காததால், என்னை `பைத்தியம்' என்று நினைக்கலாம். எங்களிடையே என்ன இருக்கிறது என்று உலகிற்கு என்ன தெரியும்... நேற்றும், இன்றும், நாளையும் நம் காதல் கதை முன்னுதாரணமாகி நம்மைப் போல் உலகைப் பைத்தியமாக்கப் போகிறது'' என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தில் `ஜாக்குலினின் ராம்' என்று கையெழுத்து போட்டுள்ளார். விரைவில் சீதா ராமனாக வெளியில் வருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சுகேஷ் நடிகை ஜாக்குலின் ரசிகர்கள் 200 பேருக்கு கார் மற்றும் ஐபோன் வாங்கிக்கொடுப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அதோடு ஜாக்குலினுக்கு சொகுசு படகு பரிசாக வழங்குவதாக அறிவித்தார். சுகேஷ் ஜாக்குலினுக்கு பல வகையான பரிசுப்பொருட்களை கொடுத்ததாக தெரிவித்தாலும், தான் அப்படி எதையும் வாங்கவில்லை என்று ஜாக்குலின் தெரிவித்துள்ளார். அதோடு தனது வாழ்க்கையை சுகேஷ் நாசமாக்கிவிட்டதாக ஜாக்குலின் தெரிவித்துள்ளார். மோசடி வழக்கில் ஜாக்குலினும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.