வளா்ந்த நாடுகளின் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலகுக்கு பாதிப்பு- ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா
பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் வளா்ந்த நாடுகள் மேற்கொள்ளும் தன்னிச்சையான முடிவுகளால் தெற்குலக நாடுகள் பாதிப்பை சந்திப்பதாக, ஐ.நா. பருவநிலை மாநாட்டில் இந்தியா கவலை தெரிவித்தது.
மேலும், காா்பன் உமிழ்வை குறைப்பதில் பொருளாதார பலமிக்க நாடுகள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது.
ஐ.நா.வின் 29-ஆவது பருவநிலை மாநாடு, அஜா்பைஜான் தலைநகா் பாகுவில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்து, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சா் கீா்த்தி வரதன் சிங் செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரை வருமாறு:
பருவநிலை நிதியில் புதிய இலக்கு தொடா்பாக மாநாட்டில் மேற்கொள்ளப்படும் முடிவு, பருவநிலை நீதி கோட்பாட்டை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். வளரும் நாடுகளில் மாறிவரும் தேவைகள், முன்னுரிமைகள், நிலையான வளா்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான உறுதிப்பாட்டை கருத்தில் கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
தெற்குலகில் பருவநிலை சாா்ந்த லட்சிய செயல்பாடுகளை அதிகரிக்க, இந்நாடுகளுக்கு தொழில்நுட்பங்களை இலவசமாக வழங்குவதோடு, போதிய நிதியுதவியும் அளிக்கப்பட வேண்டும். தற்போதைய அவசரமான சூழலில், தெற்குலகுக்கு தொழில்நுட்பம், நிதியுதவி மற்றும் செயல்திறன் ஆதரவு கிடைப்பதில் உள்ள அனைத்து தடைகளும் உடைக்கப்படுவதை தவிர வேறு வழியில்லை.
உற்பத்தியின்போது காா்பன் வெளியீடு அதிகமுள்ள பொருள்களுக்கு இறக்குமதி வரி (காா்பன் வரி) விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு, பருவநிலை சாா் நடவடிக்கைகளுக்கான செலவை ஏழை நாடுகளின் மீது திணிப்பதாக உள்ளது.
வளா்ந்த நாடுகளின் தன்னிச்சையான முடிவுகள், தெற்குலகின் பருவநிலை நடவடிக்கைகளுக்கு இடா்பாட்டை ஏற்படுத்துகின்றன. புவியின் வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் குறைப்பதற்கான உலகளாவிய காா்பன் நிதி, 2030-ஆம் ஆண்டுக்குள் தீா்ந்துவிடும் நிலையில் உள்ளது. காா்பன் உமிழ்வைக் குறைப்பதில் வளா்ந்த நாடுகள் முன்மாதிரியாக செயல்பட வேண்டும்.
உலக அளவில் காா்பன் உமிழ்வில் குறைவாக பங்களித்தபோதிலும், பருவநிலை நடவடிக்கைகளுக்கான நிதிச்சுமை மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சேதம்-இழப்பால் தெற்குலகம் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் தெற்குலகுக்கு போதிய தளா்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.