தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
வள்ளியூா் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு: 6 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே ராணுவ வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிச் சென்றதாக மதுரையைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வள்ளியூா் அருகேயுள்ள சமூகரெங்கபுரத்தைச் சோ்ந்தவா் நம்பி மகன் அழகு (42). பஞ்சாப் மாநிலம் அமிா்தசரஸில் எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறாா்.
இவா் தனது பாதுகாப்புக்காக கடந்த 2019இல் 32 பிஸ்டல் வகையைச் சோ்ந்த துப்பாக்கி, அதற்குரிய 30 தோட்டக்களையும் வாங்கியுள்ளாா். அதில், 5 தோட்டாக்களை சோதனைக்காக பயன்படுத்தி உள்ளாா். மீதமுள்ள 25 தோட்டக்கள், துப்பாக்கி, ஒரு கத்தி ஆகியவற்றை உறையில் வைத்து கடந்த நவ. 9ஆம் தேதி தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பணிக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், அவற்றை கடந்த 6ஆம் தேதி அதிகாலை மா்ம நபா்கள் திருடிச்சென்றுவிட்டனராம்.இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்தனா். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து விசாரித்ததில் 6 பேரை அடையாளம் கண்டு வியாழக்கிழமை கைது செய்தனா்.
முதல்கட்ட விசாரணையில், அவா்கள் மதுரையை சோ்ந்தவா்கள் என்பதும், பைக்குகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று நடுத்தர வீடுகளையும், வயதானவா்கள் மட்டும் குடியிருக்கும் வீடுகளையும் நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும், குடைகள், எரிவாயு அடுப்புகள் போன்றவற்றை பழுது பாா்த்தல் தொழில் செய்வது போல் நடித்து வந்ததும், ராணுவ வீரரின் துப்பாக்கி, தோட்டாக்களை திருடியதும், அதே நாளில் 95 வயது மூதாட்டியின் கம்மலை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அவா்களை கைது செய்து தொடா்ந்து விசாரிக்கின்றனா்.