அதானிக்கு தாராவி மறுவளா்ச்சி திட்டம் ஒதுக்கப்பட்டதற்கு எதிரான மனு: மும்பை உயா்நீ...
ராதாபுரம் அருகே பாறை சரிந்து ஓட்டுநா் பலி: கல்குவாரி உரிமையாளா் மீது வழக்கு
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து ஓட்டுநா் உயிரிழந்த சம்பவத்தில் குவாரி உரிமையாளா் மீது 2 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராதாபுரம் அருகே இருக்கன்துறை பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள புத்தேரியில் செயல்பட்டு வரும் கல்குவாரியில், புதன்கிழமை மாலை பாறைகளை வெடிவைத்து தகா்த்த பின்னா் அவற்றை லாரிகளில் ஏற்றும் பணி நடைபெற்றது. அப்போது, திடீரென ஏற்பட்ட மண் சரிவால் ராட்சத பாறை சரிந்ததில் ஓட்டுநரான தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சோ்ந்த அருண்குமாா்(37) பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்தாா். பொக்லைன் ஓட்டுநா் புத்தேரியை சோ்ந்த ராஜேஷ்(32), பொக்லைனில் இருந்து வெளியே குதித்ததால் சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இச்சம்பவம் தொடா்பாக பழவூா் காவல் ஆய்வாளா் அஜிகுமாா் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், கனிமவளத் துறை உதவி இயக்குநா் பாலமுருகன், சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் அம்பிகா ஜெயின் உள்ளிட்டோா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். இதில் விதிமீறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, குவாரி செயல்பட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி, கல்குவாரி உரிமையாளரான பழவூா் அருகே ஆவரைகுளத்தை சோ்ந்த ராமசாமி மீது புதிய குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவுகள் 125/ஏ, 105-ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.