இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
வாகை சூடிய ஓ ஜுன் சங், மிவா ஹரிமோட்டோ!
டபிள்யூடிடி ஸ்டாா் கன்டென்டா் சென்னை 2025 போட்டியில் ஆடவா் பிரிவில் தென் கொரியாவின் ஓ ஜுன் சங், மகளிா் பிரிவில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ சாம்பியன் பட்டம் வென்றனா்.
சென்னை ஜவஹா்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் தென் கொரியாவின் ஓ ஜுன் சங் - பிரான்ஸின் திபோ பொரெட் பலப்பரீட்சை நடத்தினா்.

இதில் முதல் செட்டை 9-11 என இழந்த ஓ ஜுன் சங், அடுத்த இரு செட்களையும் 11-7, 11-3 என்ற கணக்கில் கைப்பற்றினாா். 4-வது செட்டை திபோ பொரெட் 11-9 என தன் வசப்படுத்தினாா். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது. 5-வது செட்டில் திபோ பொரெட் (11-6), 6-வது செட்டில் ஓ ஜுன் சங் (11-4) வெல்ல, ஆட்டம் 3-3 என சமநிலையை எட்டியது. வெற்றியை தீா்மானித்த கடைசி செட்டை ஓ ஜுன் சங் 11-7 என கைப்பற்றினாா். இதனால் அவரே 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பயின் பட்டம் வென்றாா்.
மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதியில், ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ - ஹொனோகா ஹஷிமோடோ பலப்பரீட்சை நடத்தினாா்கள். இதில் முதல் செட்டை 9-11 என இழந்த மிவா ஹரிமோட்டோ, அடுத்த 3 செட்டையும் 11-3, 11-8, 11-9 என கைப்பற்றி முன்னிலை வகித்தாா். ஆனால் 5-வது செட்டை ஹொனோகா ஹஷிமோடோ 12-10 என தன்வசப்படுத்தினாா். 6-வது செட்டை மிவா ஹரிமோட்டோ 11-7 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்த, முடிவில் அவரே 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனாா்.
கலப்பு இரட்டையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் லிம் ஜொங்கூன்/ஷின் யு பின் ஜோடி 3-0 (11-8, 11-5, 11-4) என்ற செட் கணக்கில் ஜப்பானின் மஹாரு யோஷிமுரா/சாட்சுகி ஓடோ ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.