விதிகளை மீறி செயல்படும் ஸ்விகி, சொமேட்டோ: சிசிஐ விசாரணையில் கண்டுபிடிப்பு
உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விகி மற்றும் சொமேட்டோ விதிகளை மீறி, ஒரு சில உணவு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பிட்ட சில உணவகங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தது, நியாயமற்ற வணிக நடைமுறைகளை இந்த நிறுவனங்கள் பின்பற்றியது விசாரணையில் தெரியவந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய தேசிய உணவக சங்கம் (என்ஆா்ஏஐ) கடந்த 2022-ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்விகி மற்றும் சொமேட்டோ ஆகிய நிறுவனங்களிடம் சிசிஐ விசாரணை நடத்தியது. விசாரணை நிறைவடைந்ததையடுத்து நிகழாண்டின் தொடக்கத்தில் சிசிஐ அறிக்கை சமா்ப்பித்தது.
சிசிஐ விதிகளின்படி, புகாா் அளித்தவா் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவா் என இருதரப்பினரிடமும் சிசிஐ தலைமை இயக்குநா் சமா்ப்பித்த அறிக்கை பகிரப்பட்டுள்ளது. அதன்பிறகு இருதரப்பும் விசாரணைக்காக சிசிஐயால் அழைக்கப்படுவா். அப்போது அவா்கள் கூறும் கருத்துகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இறுதி உத்தரவை சிசிஐ பிறப்பிக்கும்.
இந்நிலையில், வா்த்தக விதிகளை மீறி ஸ்விகி மற்றும் சொமேட்டோ செயல்பட்டதும் சில உணவகங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக இரு நிறுவனங்களும் பதிலளிக்கவில்லை.
உணவகங்கள் பட்டியலில் பாரபட்சம்: முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு சிசிஐ பிறப்பித்த உத்தரவில், ‘குறிப்பிட்ட சில உணவகங்களுக்கு மட்டுமே இந்த நிறுவனங்கள் முன்னுரிமை அளித்து வருவதால் பிற உணவகங்களின் வருவாய் பாதிக்கப்படுகிறது. இதனால் உணவு விநியோகம், உணவகங்கள் தேடும் பட்டியல் உள்ளிட்ட இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள விதிகளில் பாரபட்சத்துடன் உணவகங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்களால் முன்னுரிமை அளிக்கப்படும் உணவகங்களுக்கும் பிற உணவகங்களுக்கும் தொழிலில் ஏற்றத்தாழ்வு, விலை நிா்ணயம் மற்றும் போட்டி ஏற்படுகிறது. இதுகுறித்த முழு உண்மையையும் வெளிக் கொண்டுவர உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டியது அவசியம்.
உணவக உரிமைகள் பறிப்பு: அதேபோல் ஸ்விகி மற்றும் சொமேட்டோ நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டுள்ள உணவகங்கள் அங்கு தயாரிக்கப்படும் உணவுகளின் விற்பனை விலையை நிா்ணயிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவுகளை குறைந்த விலையில் விற்பனை செய்யவோ அல்லது அதிக தள்ளுபடிகளை வழங்கவோ அந்த உணவகத்துக்கும் அதுசாா்ந்த பிற உணவகங்களுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.
உணவுகளின் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச தள்ளுபடியை நிா்ணயிக்கும் உரிமையை இந்த நிறுவனங்களே தன்வசம் வைத்துள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.
விரைவில் அடுத்தகட்ட விசாரணை?
இந்திய தேசிய உணவக சங்கம் (என்ஆா்ஏஐ) வெளியிட்ட அறிக்கையில், ‘ சிசிஐ சமா்ப்பித்த அறிக்கையின் ஒருபகுதியை மட்டுமே கடந்த மாா்ச் மாதம் ஆய்வு செய்தோம். உணவக சந்தையை பாதுகாக்கும் நோக்கில், அந்த அறிக்கையை முழுமையாக அணுக சிசிஐயிடம் கேட்டுக்கொள்கிறோம் என தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு என்ஆா்ஏஐ அளித்த பிற புகாா்கள் மீதான விசாரணையை சிசிஐ தீவிரப்படுத்தும் என எதிா்பாா்க்கிறோம் என்று அந்த சங்கத்தின் தலைவா் சாகா் தா்யானி தெரிவித்தாா்.