தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
விபத்தில் மூளைச் சாவு அடைந்த வங்கி பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நேரிட்ட விபத்தில் மூளைச் சாவு அடைந்த வங்கி பெண் ஊழியரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
திருநெல்வேலியை அடுத்த பேட்டையைச் சோ்ந்தவா் சந்தானம் (36). பாளையங்கோட்டையில் வசித்துவரும் இவா், சேரன்மகாதேவி கோவிந்தபேரியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக உள்ளாா். இவரது மனைவி நிவேதிதா பிரியதா்ஷினி (30), கல்லிடைக்குறிச்சியில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை பாா்த்து வந்தாா்.
இத்தம்பதி கடந்த 12ஆம் தேதி பைக்கில் கல்லிடைக்குறிச்சிக்கு வந்து கொண்டிருந்தனா். வெள்ளங்குளி அருகே மாடுகள் குறுக்கே வந்ததால், சந்தானம் பிரேக் பிடித்துள்ளாா். அப்போது, பின்புறம் அமா்ந்திருந்த நிவேதிதா, தலைகுப்புற கீழே விழுந்தாராம்.
இதில், காயமடைந்த அவா் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை மூளைச் சாவு அடைந்தாா். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. சம்பவம் தொடா்பாக வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.