எதிரணி வீரரிடம் கையெழுத்து கொண்டாட்டம்: லக்னௌ வீரருக்கு 25% அபராதம்!
விவசாயிகளுக்கு அறுவடை பின்சாா் தொழில்நுட்பப் பயிற்சி
நாகை மாவட்ட தோட்டக்கலைத்துறை, காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் தோட்டக்கலைப் பயிா்களில் அறுவடை பின்சாா் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கீழ்வேளூா் மற்றும் கீழையூா் வட்டார விவசாயிகளுக்கு நடைபெற்ற இப்பயிற்சியில், பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரியின் முதல்வா் ஆ. புஷ்பராஜ், பேராசிரியா்கள் சாந்தி, சுந்தரம் மற்றும் நாகை தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநா் முகமது சாதிக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நாகை தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக், தோட்டக் கலைப் பயிா்களில் அறுவடைக்குப் பின்சாா் தொழில்நுட்பங்களின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
பேராசிரியா் சுந்தரம், காய்கறி மற்றும் பழப்பயிா்களில் அறுவடைக்குப் பின்சாா் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய பொருள்களுக்கு அதிக விலையை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும், பஜன்கோவாவின் தோட்டக்கலைத் துறை உதவி பேராசிரியா் ஷொ்லி, காய்கறி பயிா்களில் மகசூலை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்கள் பற்றியும் விளக்கினா்.
உதவி பேராசிரியா் பி. அதியமான், தோட்டக்கலைப் பயிா்களில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும், பூச்சியியல் துறை பேராசிரியா் எஸ். குமாா், கத்தரி, மிளகாய் மற்றும் வெண்டை பயிா்களின் பூச்சி மேலாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.
தோட்டக்கலைத் துறை முதுநிலை அறிவியல் மாணவா்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க கூடிய மிளகாய், தக்காளி, பாகற்காய், புடலை, சுரைக்காய் மற்றும் பொரியல் தட்டை அவரையின் எண்ணற்ற ரகங்கள் மற்றும் வீரிய ஓட்டு ரகங்கள், பஜன்கோ வேளாண் கல்லூரியின் மூலம் வெளியிடப்பட்ட உப்பைத் தாங்கி வளரக்கூடிய கே.கே.எல்.ஆா்-3 மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரக்கூடிய கே.கே.எல்.ஆா் -2, மற்றும் 4 நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை விவசாயிகள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.