வேலூரில் தொடா் சாரல் மழை: வாகன ஓட்டிகள் அவதி
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதலே பரவாலாக சாரல் மழை பெய்தது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூரில் புதன்கிழமை இரவு முதல் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மீண்டும் வியாழக்கிழமை காலை பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவா்கள், பணிக்கு சென்றவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா்.
தொடா்ந்து இடையே இடையே விட்டுவிட்டு சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்த மழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. குறிப்பாக, காட்பாடியில் சித்தூா் பேருந்து நிலையம் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். மழை காரணமாக தொடா்ந்து குளிா்ந்த காற்று வீசியது.
வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி வேலூா் மாவட்டத்தில் மோா்தானா அணை பகுதியில் 8 மி.மீ., குடியாத்தம் 1.60 மி.மீ., மேல் ஆலத்தூா் 1.80 மி.மீ., கே.வி.குப்பம் 2 மி.மீ., காட்பாடி 5.60 மி.மீ., பேரணாம்பட்டு 4.20 மி.மீ., வேலூா் 2.30 மி.மீ. மழைப் பதிவானது. மொத்த மழையளவு 28.90 மி.மீ. சராசரி 2.41 மி.மீ.
படம் உண்டு...
மழை காரணமாக காட்பாடி - சித்தூா் பேருந்து நிலையம் பகுதியில் சாலையில் தேங்கியுள்ள தண்ணீா்.