வேலூர்: 8-வது பிரசவத்துக்காக வந்த இளம்பெண்... குடும்பக் கட்டுப்பாடு செய்ய மறுத்து தப்பி ஓட்டம்!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்துள்ள மேல்ஆலாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரசாந்த். இவரின் மனைவி அமுதா (29).
இந்தத் தம்பதிக்கு ஏற்கெனவே 7 குழந்தைகள் பிறந்து, அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டன. மீதமுள்ள 5 குழந்தைகளும் நலமுடன் இருக்கின்றன. குடும்ப வறுமைக் காரணமாக அமுதாவும் 100 நாள் வேலைக்குச் சென்றுகொண்டே 5 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்த நிலையில், 8-வது முறையாக அமுதா கர்ப்பமடைந்தார். தொடர்ந்து, அருகிலுள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவப் பரிசோதனை எடுத்துகொண்டார். நிறைமாதம் ஆனதால், பிரசவத்துக்காக அடுக்கம்பாறை பகுதியிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார் அமுதா. 8-வது பிரசவம் என்பதை தெரிந்துகொண்ட மருத்துவர்கள், குழந்தை பிரசவித்த பிறகு `குடும்பக் கட்டுப்பாடு’ செய்துகொள்ள அமுதாவிடம் அறிவுறுத்தினர்.
குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்காத அமுதாவும், அவரின் கணவரும் கடந்த 4-ம் தேதி மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி வீட்டுக்குச் சென்றுவிட்டனர். மகப்பேறு வார்டில் அமுதா இல்லாததைக் கண்ட மருத்துவர்கள் உடனடியாக மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவலைத் தெரியப்படுத்தினர். இதையடுத்து, வட்டார மருத்துவ அதிகாரி செல்வி, கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார், செவிலியர்கள் விஜயகுமாரி, கலைவாணி, சுகாதார ஆய்வாளர் அஜித் ஆகியோர் அடங்கிய குழுவினர் மேல்ஆலாங்குப்பம் கிராமத்துக்கு விரைந்தனர். `குடும்பச் சூழல்’, `பொருளாதார நிலை’ போன்றவற்றை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு மீண்டும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு வந்து பிரசவத்துக்காக அனுமதித்துள்ளனர்.