̀" 'கடைசி விவசாயி' பட கடைசி சீனில் தாத்தா கண் முழிக்கவில்லை என்றால்..." - ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேட்டி
``காவ்யா வெறும் ஒரு கேம் டெவலப்பர் கதாபாத்திரம் கிடையாது. அவள் ரொம்ப கோபப்படும் ஒரு பெண், அதுவும் அவங்க அம்மா கூட அதிகமா கோபப்படுவாள்.
ஒரு நடிகையா நான் அந்த கதாபாத்திரத்தை அனுதாபப்பட்டு பார்க்கணும். நெகட்டிவ் கமென்ட்ஸ் வாங்குறது பத்தி ஒரு பிரபலமா எனக்குத் தெரியும், சந்தேகப்படுறது," என்று பேச ஆரம்பித்தார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

"The Game: You Never Play Alone" என்ற வெப் தொடர் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரின் பிரொமோஷனுக்காக சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு படக்குழு பேட்டி அளித்திருந்தனர்.
அதில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசுகையில், "எனக்கும் இந்த காவ்யா கதாபாத்திரத்திற்கும் சில வித்தியாசம் இருக்கு.
அவளுக்கு வரும் நெகட்டிவ் கமென்ட்ஸ் நிஜ வாழ்க்கையில் அச்சுறுத்தலாகும், எனக்கு அச்சுறுத்தல் இல்லை. சமூக வலைத்தளத்தில் என்ன போஸ்ட் போடணும் என ஒரு தெளிவு இருக்கும்.
அது காவ்யா கதாபாத்திரத்திற்கு தலைகீழா இருக்கும். வெப் தொடர்களில் எனக்கு ஹாலிவுட்டின் 'அடலசன்ஸ்' தொடர் ரொம்ப பிடிக்கும். என் சகோதரிக்கு 12 வயது பெண் குழந்தை இருக்கு.

பெண் குழந்தைகள் என்றால் இன்னும் நாம் அதிக அக்கறையோடு இருப்போம் இல்லையா, அதை ரொம்ப அழகாவும் உணர்வுபூர்வமாவும் அந்த சீரிஸில் கையாண்டிருந்தாங்க." என்றவர் அவருக்கு பிடித்த திரைப்படங்கள் குறித்தும் பேசினார். அவர், "கன்னட சினிமாவுல 'சப்த சாகரதாச்சே எல்லோ - SIDE A மற்றும் SIDE B', மிகவும் அற்புதமான திரைப்படங்கள்.
அது ரொம்பவும் பிடிச்சது. அழகான காதல் கொண்ட திரைப்படங்கள் நாம் அதிகம் எடுப்பதில்லை என நினைக்கிறேன். எனக்கு காதலில் உள்ள வலிகளை பார்க்கவும், உணரவும் பிடிக்கும்.
'கடைசி விவசாயி' இப்போ சமீபத்தில் தான் பார்த்தேன், கடைசி காட்சியில் அந்த தாத்தா கண் முழிக்கவில்லை என்றால் எனக்கு இந்த உலகின் மீது இருந்த எல்லா நம்பிக்கையையும் இழந்திருப்பேன். 'சுடானி ஃப்ரம் நைஜீரியா' என்ற மலையாளத் திரைப்படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்றார்.